Home கலை உலகம் விஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் – 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்

விஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் – 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்

765
0
SHARE
Ad

Visvaroopam-poster-Slider--2சென்னை, பிப்ரவரி 2 – “விஸ்வரூபம்” பட விவகாரத்தில், நடிகர் கமலஹாசனுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே, சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து படம் விரைவில் தமிழ் நாட்டில் வெளியாகவுள்ளது.

ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவதாக, கமல் ஒப்புக் கொண்டதால், சமரசம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, “படம் வெளியாகும் தேதியை, விரைவில் அறிவிப்பேன்’ என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, “விஸ்வரூபம்’ படம் மீது, தமிழக அரசு விதித்துள்ள தடை மற்றும் ஐகோர்ட் வழக்குகள், வாபஸ் பெறப்படுகின்றன.

#TamilSchoolmychoice

“விஸ்வரூபம்’ படத்தை திரையிட, பெரும் அரசியல் விளையாடுவதாகவும், தமிழக அரசு இதன் பின்புலத்தில் உள்ளதாகவும், பல தரப்புகளிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்புகளுடன், நடிகர் கமல்ஹாசன் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண, தமிழக அரசு உதவும் என அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், முஸ்லிம் அமைப்புகள் மற்றும், நடிகர் கமலஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஆகியோர், தலைமை செயலகத்துக்கு வந்தனர்.

ஆனால், படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான நடிகர் கமல் மும்பையில் இருந்ததால், அவர் சென்னை திரும்பியதும் பேச்சு நடத்தலாம் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை திரும்பினார் கமல்…

அரசின் கருத்தைத் தொடர்ந்து, கமலஹாசன் நேற்று காலை, சென்னை திரும்பியதும், பிற்பகல் 3:00 மணியளவில், சென்னை தலைமை செயலகத்தில், முத்தரப்பு பேச்சு துவங்கியது.

உள்துறை செயலர் ராஜகோபால், தலைமை வகித்தார்.நடிகர் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் ஹனீபா உள்ளிட்ட, 14 பிரதிநிதிகள், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர், முத்தரப்பு பேச்சில் பங்கேற்றனர்.

“விஸ்வரூபம்’ படத்தில் ஆட்சேபகரமாக, ஏழு காட்சிகள் உள்ளதாகவும், அவற்றை நீக்கும்படியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

படம் விரைவில் திரையீடு

இதையடுத்து, உள்துறை செயலருக்கு, “விஸ்வரூபம்’ படம், தலைமை செயலகத்திலேயே திரையிடப்பட்டது.

இரவு, 7:00 மணியளவில், திரைப்படம் முடிந்ததும் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:முஸ்லிம் தரப்பினர் தெரிவித்த ஏழு ஆட்சேபகர காட்சிகளில், சிலவற்றை நீக்கவும், சில காட்சிகளில், ஒலி அமைப்பை நீக்கவும், கமல் ஒப்புக் கொண்டார்.

காட்சிகளை நீக்கியதும், படம் வெளியிடத் தடையில்லை என, அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் முன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்த விசாரணையின் போது, முஸ்லிம் அமைப்புகளுக்கும், நடிகர் கமலுக்கும் ஏற்பட்டுள்ள சமரசத்தை, தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்து, வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.

முதல்வருக்கு நன்றி 

“சந்திப்புக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி. இன்று, அரசு விடுமுறை தினமாக இருந்தாலும், ஆறு மணி நேரம் எங்களுடன் பேசி, அறிவுரையும், ஆறுதலும் கூறிய, உள்துறை செயலருக்கும் நன்றி,” என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்இஸ்லாமிய சகோதரர்களுடன் பேசி, குறைகளைத் தெரிந்து கொண்டு, என்னால் என்ன இயலும் என்பதையும், தொழில்நுட்பப் பிரச்னைகள் குறித்தும், இரு தரப்பிலும் பேசி சமாதானம் செய்து கொண்டோம்”

“படத்தில் சில காட்சிகளில், ஒலிக் குறைப்பு செய்வதாக ஒப்புக் கொண்டேன். அந்தக் காட்சிகள் குறித்த பட்டியல், சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்து, சட்டப்படி காட்சிகள் குறைப்பு செய்யப்படும். என்னுடைய தரப்பில் இருந்து கோர்ட்டில் போடப்பட்ட மனுவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.இந்தப் படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்கும் என நம்புகிறேன். சுமுகமாக இதை முடித்து வைத்த, தமிழக அரசுக்கு நன்றி” – இவ்வாறு கமல் கூறினார்.

விஸ்வரூபம் தொடர்பிலான பேச்சு வார்த்தை குறித்து கருத்து தெரிவித்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்ஏழு காட்சிகள் எங்களுக்கு ஆட்சேபணைக்கு உரியதாக இருந்தன. அதை ஒலிக் குறைப்பு செய்வதாக ஒப்புக் கொண்டார். எங்கள் தரப்பு வழக்குகளை, நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினர்.