Home இந்தியா என்னை பதவி விலகும்படி யாரும் கேட்கவில்லை: என்.சீனிவாசன் விளக்கம்

என்னை பதவி விலகும்படி யாரும் கேட்கவில்லை: என்.சீனிவாசன் விளக்கம்

569
0
SHARE
Ad

srinivasanசென்னை, ஜூன் 3-  சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார்  தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செயற்குழு விவாதங்கள் முடிவில் கிரிக்கெட் சூதாட்ட விசாரணை முடியும் வரை கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நான் ஒதுங்கி இருப்பேன் என்று அறிவித்தேன். அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் வாரியம் இயங்க வேண்டும் என்பதால் அந்த பணியை கவனிக்கும்படி டால்மியாவை கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

செயற்குழுவில் என்னை பதவி விலகும்படி எந்த உறுப்பினரும் கேட்கவில்லை. கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து விலகிய சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே, ஐ.பி.எல். சேர்மன் பதவியில் இருந்து விலகிய ராஜீவ்சுக்லா ஆகியோர் தங்கள் பதவியில் தொடர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

#TamilSchoolmychoice

அவர்கள் நாளை பதவிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். செயற்குழு கூட்டத்தில் என்னை பதவி விலகும் படி பிந்த்ரா கோரவில்லை. கூட்டம் சுமூகமாக நடந்தது. யாரும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

அஜய் ஷிர்கேவின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஷிர்கே, ஜக்தாலே திரும்ப வேண்டும் என்பது எங்களின் ஒருமித்த முடிவாகும். ஷிர்கே எனது சிறந்த நண்பர்.

அவரும், ஜக்தாலேவும் நாளை திரும்புவார்கள். சூதாட்ட விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நான் ஒதுங்கி இருப்பேன். எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் கிடையாது. இவ்வாறு என்.சீனிவாசன் கூறினார்.

செயற்குழு முடிந்த பின்னர் பஞ்சாப் கிரிக்கெட் சங்க தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா கூறுகையில்,

என்.சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் நான் மட்டுமே கேட்டேன். இடைக்கால தலைவராக டால்மியா நியமனம் உள்பட பல விஷயங்களில் அருண்ஜெட்லியின் ஆலோசனை படியே முடிவுகள் எடுக்கப்பட்டன. என்.சீனிவாசன், தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.

அவர் ஒரு மாதம் மட்டுமே தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார். இது மக்களை ஏமாற்றும் செயலாகும். அவர் செப்டம்பர் மாதம் வரை பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நான் யோசனை தெரிவித்தேன். ஆனால் அவர் விலக போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்’ என்றார்.