Home இந்தியா மேல்-சபை தேர்தல்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுடன் தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை

மேல்-சபை தேர்தல்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுடன் தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை

644
0
SHARE
Ad

சென்னை, ஜூன்12- தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பிக்களை தேர்வு செய்ய வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

jeyaஅ.தி.மு.க சார்பில் மைத்ரேயன், ரத்னவேல், கே.ஆர்.அர்ஜூன், லட்சுமணன், தங்கமுத்து ஆகிய 5 பேரை வேட்பாளர்களாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரில் 4 பேர் வெற்றி உறுதியான நிலையில் 5-வது நபரை தேர்வுசெய்ய அ.தி.மு.க.விடம் 15 எம்.எல்.ஏக்களின் ஓட்டுக்களே உள்ளது. 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்பதால், அ.தி.மு.க.வுக்கு மேலும் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும்.

#TamilSchoolmychoice

புதிய தமிழகம் (2), மனித நேய மக்கள் கட்சி(2), பார்வர்டு பிளாக் (1) ஆகிய கட்சிகளின் 5 ஓட்டுகளும், தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 6 பேர் ஓட்டுக்களும் ஆக மொத்தம் 11 ஓட்டுகள் கிடைப்பது உறுதியாகி விட்டது. இதுபோக இன்னும் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அ.தி.மு.கவுக்கு தேவைப்படுகிறது. என்றாலும் அ.தி.மு.கவின் 5-வது வேட்பாளரும் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் 6-வது எம்.பியாக தேர்வாவது யார் என்பதில் தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கைகோர்த்து ஏகமனதாக ஒருவரை நிறுத்துவார்கள் என்று முதலில் தகவல்கள் வெளியானது.

ஆனால் தி.மு.க.-தே.மு.தி.க இடையே சுமூக உறவு ஏற்படவில்லை. மேல்சபை தேர்தலில் தே.மு.தி.க.வால் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. தி.மு.க.வுக்கு கதவை அடைத்துவிட்ட அந்த கட்சி, தனக்காகவும், கம்யூனிஸ்டுகள் உள்பட யாருடனும் பேச்சு நடத்தவில்லை.

Vijaykanth-Sliderதே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சிலர் அடுத்தடுத்து தாவக்கூடும் என்ற பரபரப்பால் விஜயகாந்த் மவுனமாக உள்ளார். கடைசி நிமிடத்தில் அவர் தன் முடிவை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் தி.மு.க. 6-வது எம்.பி பதவியை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சட்டசபையில் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களது ஆதரவை பெற்றாலே போதும் தி.மு.க. வுக்கு ஒரு எம்.பி. பதவி கிடைத்து விடும்.

இதை உறுதிபடுத்துவதற்காக இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது. அதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து தி.மு.க.-மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்கள் உடன்பாட்டுக்கு வருவார்கள் என்று தெரிகிறது.

இதன் மூலம் தமிழக அரசியலில் அ.தி.மு.க. அணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. பக்கம் வருகிறது. தி.மு.க. சார்பில் மேல்சபை தேர்தலில் மீண்டும் கனிமொழி நிறுத்தப்பட உள்ளார். அவரை ஆதரிக்க மார்க்சிஸ்டுகள் எதிர்கால பலனை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தியுள்ளனர்.

அடுத்த ஆண்டு (2014) டெல்லி மேல்சபையில் இருக்கும் தமிழக எம்.பிக்களில் 6 பேரின் பதவி காலம் முடிகிறது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி.ரங்கராஜனும் அடங்குவார். அந்த இடத்தை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெற அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் போது தி.மு.க. உதவும் என்ற அடிப்படையில் உறவு ஏற்படுத்தப்படுகிறது.

எனவே மேல்சபை தேர்தலில் தே.மு.தி.க.வோ அல்லது இந்திய கம்யூனிஸ்டு கட்சியோ போட்டியிட்டால்தான் ஓட்டுப்பதிவு நடைபெறும். இல்லையெனில் 5 அ.தி.மு.க எம்.பிக்கள் ஒரு தி.மு.க. எம்.பி போட்டியின்றி தேர்வாகி விடுவார்கள்.