ஜூன் 15- மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் 1 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.
மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. வரும் 17ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் முடிகிறது.
கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். போட்டியில் கனிமொழி வெற்றி பெற மேலும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அவருக்கு காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பல்வேறு தரப்பிலும் கனிமொழி பேசிவருகிறார்.