Home 13வது பொதுத் தேர்தல் ஹூசாம் மூசா இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

ஹூசாம் மூசா இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

642
0
SHARE
Ad

husam-musa5-nov3கோத்தாபாரு, ஜூன் 23 தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஹூசாம் மூசா (படம்) விசாரணைக்காக மேலும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஹூசாம் மூசா காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தாபாரு காவல் துறை தலைமையகத்தில் கீழ்நீதிமன்ற நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) நிக் சாப்ரி முகமட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

54 வயதான ஹூசாம் மூசா நேற்று மாலை 4 மணியளவில் தலைநகர் கம்போங் பாண்டானில் சிலாங்கூர் மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, நேற்றிரவே கோத்தாபாரு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

மெர்போக் திடலில் நடைபெறும் 505 கறுப்புப் பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மரணமடைந்தால் அவர்கள் தியாகிகளாகக் கருதப்படுவார்கள் என ஹூசாம் மூசா பேசியதன் தொடர்பில் அவர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹூசாம் மூசாவின் பேச்சை பாஸ் கட்சியின் தகவல் ஏடான ஹராக்கா டெய்லி செய்தியாக வெளியிட்டிருந்தது.

சாலோர் சட்டமன்ற உறுப்பினரான ஹூசாம் மூசா மீதான விசாரணையை மேற்கொண்டு வரும் காவல் துறை அதிகாரி ஏஎஸ்பி நோலாண்ட் ஜானா இந்த தடுப்புக் காவல் உத்தரவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஹூசாம் மூசாவின் வழக்கறிஞர் ஹிஷாம் ஜாவ்சி, இந்த வழக்கில் 10 வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவினர் ஹூசாமிற்கு ஆதரவாக வழக்காடுவார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஹூசாம் மூசா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தாபாரு காவல் நிலையம் தற்காலிக நீதிமன்றமாக மாற்றப்பட்டு இந்த தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் பத்திரிக்கையாளர்கள் யாரும் விசாரணையின் போது அனுமதிக்கப்படவில்லை.

– பெர்னாமா