கோலாலம்பூர், ஜூலை 2 – தற்போதைய சூழ்நிலையில் மதம் மாற்றுச் சட்டம் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அதில் திருத்தம் தேவை என்று மஇகா தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இஸ்லாமிய நிர்வாக சட்டத்தின் பிரிவு 107 (பி) ல் திருத்தம் தேவை என்று கடந்த வாரம் தான் அக்கூட்டத்தில் தெரிவித்ததாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கூறினார்.
மேலும், “18 வயதுக்குக் குறைவானவர்களை அவர்களின் தந்தை அல்லது தாய் மட்டும் மத மாற்றத்திற்கு உட்படுத்த முடியாது. அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்” என்று பழனிவேல் தெரிவித்தார்.
அதோடு, “மதமாற்றுச் சட்டத்தில் ஒரு சிறு திருத்தம் செய்ய வேண்டும். அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதமாற்றம் செய்யக் கூடாது.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை” என்று பழனிவேல் பரிந்துரைத்துள்ளார்.