பினாங்கு, ஜூலை 3 – பினாங்கு சட்டமன்றத்தில் நேரத்தை மிச்சப்படுத்த கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக சபாநாயகர் லா சூ கியாங் அறிவித்ததை அடுத்து, இன்று காலை அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பினாங்கு மாநில எதிர்கட்சித் தலைவரான ஜஹாரா ஹமீடி (தெலுக் ஆயர் தவார்), “இது ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “கேள்வி நேரத்தின் போது தான் மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்போம். கேள்வி கேட்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உரிமை. இதற்கு முன் இது போன்று நடந்தது இல்லை” என்று கூறியுள்ளார்.
அதோடு, “இங்கு அதிகாரம் துஷ்பிரயோகம் நடப்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை. பினாங்கு சட்டசபையில் ஜனநாயகம் இறந்துவிட்டது” என்றும் கூறி ஜஹாரா கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஜக்தீப் சிங் டியோ( டத்தோ கெராமட்) குறுக்கிட்டு, “ஜனநாயகம் இறந்துவிட்டதாகக் நீங்கள் கூறுவது சரியல்ல. விவாத நேரத்தின் போது உங்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்படும். அப்போது அதற்கு பதிலளிக்கப்படும்” என்று கோபமாகக் கூறியுள்ளார்.