இஸ்லாமாபாத், ஜூலை 6- பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் கொண்டு வர புதிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சர்வதேச மன்னிப்பு உரிமை இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
கொடூர குற்றம்புரிகிறவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கு உலக அளவில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றன.
சுமார் 150 நாடுகள் இந்த மரண தண்டனையை ரத்து செய்து அல்லது நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்கா, சீனா, நைஜீரியா, ஏமன் உள்பட சில நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றுகின்றன. இந்த மரண தண்டனைக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ கடுமையாக எதிர்த்தார்.
அதன்பிறகு அங்கு பெனாசிர் கணவர் ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதியாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சி மலர, 2008-ம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இது கடந்த மாதத்துடன் காலாவதி ஆனது.
எனவே மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்க புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசு விரும்பவில்லை. கராச்சி பகுதியில் நடைபெறும் வன்முறை உயிர் இழப்புகள் மற்றும் தீவிரவாத செயல் காரணமாக இந்த முடிவை எடுப்பதாக தெரிகிறது.
இதுபற்றி பாகிஸ்தான் உள்துறை செய்தி தொடர்பாளர் உமர் ஹமீத்கான் கூறுகையில், தற்போதைய புதிய அரசிடம் அதை நீடிக்கும் திட்டம் இல்லை. எனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும். மனிதாபிமான அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். இதனால் பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவது மீண்டும் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு சர்வதேச பொதுமன்னிப்பு உரிமை இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது அதிர்ச்சி தருகிறது. பிற்போக்கு எண்ணம் கொண்டதாகும் என கண்டனம் செய்துள்ளது. மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. இப்போது தண்டனையில் இருந்து அப்பாவிகளை விடுவிப்பது என்பது கடினமான காரியம் என்றும் கூறுகிறார்கள்.