Home 13வது பொதுத் தேர்தல் அழியா மை விவகாரத்தில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு எதிராக பக்காத்தான் வழக்கு தொடுத்தது!

அழியா மை விவகாரத்தில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு எதிராக பக்காத்தான் வழக்கு தொடுத்தது!

665
0
SHARE
Ad

sivarasa-dec14கோலாலம்பூர்,ஜூலை 15 – 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் செல்லாது என்று அறிவித்து, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தின் 7 உறுப்பினர்களுக்கு எதிராக, பக்காத்தான் இன்று சிவில் வழக்கு ஒன்றை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.

எதிர்கட்சியைச் சேர்ந்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா (படம்) இது குறித்து கூறுகையில்,“ பொதுத்தேர்தலில் அழியா மை பயன்படுத்தியதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை செய்யத் தவறியதோடு, பல முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இதை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் படவேண்டும்” என்று இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.

“இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளும்  செல்லாது என்று அறிவிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த தேர்தல் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் உட்பட, அதன் 7 உறுப்பினர்களையும் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பக்காத்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் பக்காத்தான் சார்பாக இந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ், துணைத்தலைவர் வான் அகமட் வான் ஓமார், டத்தோ முகமட் ராம்ஜி அலி, டத்தோ டாக்டர் பி.மனோகரன், டத்தோ கிறிஸ்டோபர் வான் சூ கீ, டத்தோ முகமட் யூசோப் மன்ஸோர் மற்றும் அப்துல் அஜீஸ் காலிடின் ஆகிய 7 பேரும் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தான் பொறுப்பு 

இவ்விவகாரம் குறித்து லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸா அன்வார் கூறுகையில், “இவ்வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் பொறுப்பு வகிக்கும் அந்த 7 உறுப்பினர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 7 பேரின் தனிப்பட்ட முறைகேடுகளை வெளிக்கொண்டு வர இது தான் சிறந்த வழி” என்று கூறியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையம் இவ்வருட இறுதியில் மறுவரைதல் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குள் இந்த 7 பேரும் நீக்கப் பட்டுவிடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன் அழியா மை குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த மை ஒரு வாரத்திற்கு விரலில் இருந்து அழியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால்  தேர்தல் அன்று, மை இடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அழிந்து விட்டது.

அதன் பின், அழியா மையில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், உணவில் சேர்க்கப்படும் வண்ணங்கள் தான் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காஸிம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.