கோலாலம்பூர், ஜூலை 22 – காற்றில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம் காரணமாக தீபகற்ப மலேசியாவில் மீண்டும் புகைமூட்டம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
வானிலை குறித்து ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காற்றின் திசை மாற்றம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நடுநடுத்தர வேகத்துடன் தீபகற்ப மலேசியாவில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபகற்ப மலேசியாவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் காற்றின் வேகம் மாறுபடும் என்றும், இதனால் சில மாநிலங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த வறண்ட வானிலை காரணமாக, பல மேற்கு கடலோர மாநிலங்களில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, புக்கிட் ரம்பாய்,மலாக்கா நகரப்பகுதிகள் மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் காற்றின் மாசு அளவு முறையே 122, 112 மற்றும் 105 ஆகப் பதிவாகியுள்ளது.