Home நாடு கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல்!

கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல்!

488
0
SHARE
Ad

kuala-besutகோலாலம்பூர், ஜூலை 24 – திரங்கானு  மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினரான ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் மாதம்  26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலில், பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் நேரடி மோதலில் களமிறங்கியுள்ளன. பாஸ் வேட்பாளராக அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் (வயது 46) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்டுமான தொழிலில் ஒப்பந்ததாரராக இருப்பதோடு, அத்தொகுதி பாஸ் கிளையின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

அதே நேரத்தில், தேசிய முன்னணி வேட்பாளராக தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் (வயது 37) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோல பெசுட் தொகுதியைச் சேர்ந்தவரான இவர், வடிகாலமைப்பு மற்றும் நீர் பாசன துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் திரெங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணி 17 தொகுதிகளையும், மக்கள் கூட்டணி 15 தொகுதிகளையும் கைப்பற்றியது.

இந்நிலையில், மறைந்த ரஹ்மான் மொஹ்தார்  தேசிய முன்னணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்பதால், இன்று நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால், அதன் மூலம் திரெங்கானு மாநிலத்தில் இரண்டு அரசியல் அணிகளும் தலா 16 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று சரிசமமான பலத்தோடு திகழும்.

இதனால் அரசியல் நெருக்கடியும் உருவாகும். ஒட்டு மொத்த மாநிலத்திற்கே மறு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலையும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.