Home கலை உலகம் “என்னுயிரே என்னைப் பிரிந்தவளே” – பாடலாசிரியர் யுவாஜியுடன் ஒரு இனிமையான நேர்காணல்

“என்னுயிரே என்னைப் பிரிந்தவளே” – பாடலாசிரியர் யுவாஜியுடன் ஒரு இனிமையான நேர்காணல்

1123
0
SHARE
Ad

1005189_10151718575128058_1876412613_n

ஜூலை 29 – “என்னுயிரே என்னை பிரிந்தவளே” ….. இன்று அநேக மலேசிய இளைஞர்கள் முணு முணுக்கும் பாடல் இதுவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடல் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டது.விரைவில்  வெளிவர இருக்கும் ‘வெட்டிப்பசங்க’ என்ற மலேசிய திரைப்படத்தில் இடம்பெறவிருக்கும் காதல் பாடல் தான் இது. திலீப் வர்மன் குரலில் வெளிவரும் இந்த பாடலுக்கு வார்த்தைகள் கோர்த்தவரைத் தான் இந்த வாரம் நமது நேர்காணலுக்காக சந்தித்தோம்.

அவர் தான் மலேசிய பாடலாசிரியர் யுவாஜி…

#TamilSchoolmychoice

மலேசிய பாடல்களை நீண்ட நாட்களாக விரும்பிக் கேட்டு வருபவர்களுக்கு யுவாஜியை நன்கு தெரிந்திருக்கும் … காரணம் மலேசிய இசைத்துறையில் இன்று பிரபலமாக இருக்கும் சைக்கோ மந்த்ரா, டேடி சேக், சரண்ஜி, திலீப் வர்மன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு வரிகள் எழுதியவர்.

அந்த வகையில், அழகான ஜே.பி பொண்ணு, அவளப் பார்த்தேன் டா, கரைகின்ற போன்ற பல வெற்றி பெற்ற பாடல்களின் வரிகள் யுவாஜியுடையது தான்…

யுவாஜியுடன் பேசிய அந்த  ‘அழகு’ உரையாடல்கள் இதோ…

செல்லியல்: வணக்கம் யுவாஜி… இந்த அளவிற்கு வார்த்தைகளை உங்கள் வசம் வைத்திருக்கிறீர்களே உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

யுவாஜி: வணக்கம்… என்னைப் பத்தி சொல்லனும்னா … நான் பிறந்தது பேராக் மாநிலத்தில பாரிட் புந்தார்… படிச்சது, வளர்ந்தது எல்லாமே பத்துமலை தமிழ் பள்ளி தான்… பிறகு ஜோகூர் பாருவில் யூ.டி.எம் இல் மெக்கானிக்கல் துறையில் இஞ்சினியரிங் படித்தேன். இப்போது எனது நண்பரின் அலுவலகம் ஒன்றில் நல்ல பணியில் இருக்கிறேன்.

செல்லியல்: மெக்கானிக்கல்  இஞ்சினியரிங் படித்த நீங்கள் எப்படி திரைத்துறையில் தடம் பதித்தீர்கள்?

யுவாஜி: சிறு வயது முதலே எனக்கு இசையில் அதிக ஈடுபாடு உண்டு… 10 வயதில் முதன் முதலாக மேடையேறி ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பாடலைப் பாடினேன். அதன் பிறகு தொடர்ச்சியாக பல மேடைகளில் பாடி பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போதே எனக்கு பாடல்களின் வரிகள் எளிதில் நினைவில் நின்று விடும். ஜோகூரில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு இசை மேடையில் பாடினேன். எனது பாடலைக் கேட்ட இசையமைப்பாளர் சத்யா எனது குரல் பிடித்துப்போய் என்னைத் தொடர்பு கொண்டார்.

அவர் நிறைய மெலோடி பாடல்களை இசையமைத்து வைத்திருந்தார். ஆனால் அதற்கு பாடல் வரிகள் எழுத பாடலாசிரியரைத் தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் அந்த மெட்டுக்கேற்றார் போல் நானே பாடல்கள் எழுதி அவரிடம் காட்டினேன். அவருக்கு எனது வரிகள் மிகவும் பிடித்துபோய்விட்டது. பிறகு எனது வரிகளிலேயே அந்த பாடல்களை பாடினேன்.

பாடகராக இருந்த நான் தற்செயலாக பாடலாசிரியராக மாறினேன்.

செல்லியல்: நீங்கள் பாடலாசிரியர் ஆனதும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.. இல்லையென்றால் இவ்வளவு அழகான வரிகள் கிடைத்திருக்காது… இப்போதும் பாடுவதைத் தொடருகிறீர்களா?

யுவாஜி: இல்லை.. நான் பாடலாசிரியராக ஆன பிறகு ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். எனது வரிகளில் திறமை வாய்ந்த பாடகர்கள் பாடும் போது தான் அந்த பாடல்களைப் பாடுவதற்கு எத்தனை திறமைகளும் குரல்வளமும் தேவை என்பதை உணர்ந்தேன். எனவே தற்போது எனது குரல் வளத்தை மேலும் சிறப்பாக வளர்த்துக்கொள்ள பாட்டு பயிற்சி பட்டறை போன்றவற்றில் கலந்துகொண்டு வருகிறேன்.

செல்லியல்: மிக நல்ல விஷயம் தான்… உங்களது முதல் பாடல் வரிகள் நினைவில் உள்ளதா?

யுவாஜி:  நிச்சயமாக…. அதை நான் எந்த நாளும் மறக்கவில்லை… அதை முன்வைத்து தான் இப்போது எனது படைப்பு ஒன்றை விரைவில் வெளியிடப்போகிறேன்…அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.. எனது முதல் பாடல் வெள்ளைப்புறா.. மலேசிய ஆல்பம், குறும்படங்கள், நாடகங்கள்  சேர்த்தால் இதுவரை 80 பாடல்களை எழுதியுள்ளேன்.

473324_10150920108878058_1830018297_oசெல்லியல்: திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு எப்போது வந்தது?

யுவாஜி: திரைப்படங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் பாடல் எழுதுகிறேன். அதிலும் குறிப்பாக இந்த 2013 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பான வருடமாக அமைந்தது. மலேசிய திரைப்படங்களான மெல்லத் திறந்தது கதவு,வெண்ணிற இரவுகள் மற்றும் வெட்டிப்பசங்க ஆகியவற்றில் மொத்தம் 6 பாடல்கள் எழுதியுள்ளேன்.  ‘அடைமழை முகிலின் புன்னகை’ என்ற பாடல் யுவாஜியை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அதன் பிறகு வெண்ணிற இரவுகள் படத்தில் வானவில் என் வாசலில், கேளடி என் காதலி ஆகிய இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். வெட்டி பசங்க படத்தில் என்னுயிரே மற்றும் ஒரே ஒரு சொல்லில் என்ற இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன்.

குறிப்பாக வானவில் என் வாசலில் பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

செல்லியல்: ஒஹ்… வாழ்த்துக்கள் நானும் அந்த பாடலைக் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது… உங்களின் அடுத்த படைப்பு என்ன?

யுவாஜி: எனது அடுத்த படைப்பு ‘யுவாஜியின் வெள்ளைப்புறா’ … எனது வாழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல். இதை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டேன். இவ்வருட இறுதியில் வெளியிட முடிவெடுத்திருக்கிறேன். நான் முதன் முதலாக வரிகள் எழுதி பாடலாசியரான வெள்ளைப்புறா என்ற பாடலை மையமாக வைத்து ஒரு அழகான நாவலை எழுதியுள்ளேன்.

அதன் பிறகு, ‘சலாம் குழு’ விற்காக ‘அழகு’ என்ற ஆல்பத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளேன். இந்த சலாம் குழுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர்கள் இஸ்லாமியர்கள் தமிழ் தெரியாதவர்கள். இருப்பினும் நம் தமிழ் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக தமிழ் மொழியில் பாடல்களைக் கற்று பாடிவருகிறார்கள். அவர்கள் என்னிடம் வந்து கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அவர்களுக்கு நாங்களே தமிழ் மொழியில் பாடும் பயிற்சி கொடுத்து இந்த ஆல்பம் வெளியிடுவதற்கு கடினமாக உழைத்து வருகிறோம்.

இந்த ஆல்பத்திற்கு சமேஷ் மணிமாறன் பிண்ணனி இசையமைத்திருக்கிறார். இந்த பாடல்களை ஒளிப்பதிவு செய்வது கார்த்திக் ஷாமலன். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் இருக்கிறது வரும் ஆகஸ்ட் மாதம்  வரவிருக்கும் ‘பெண்கள் தின’ சிறப்பு விழாவின் போது சுமார் 10,000 பேர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில் மலேசிய பேரரசி முன்பாக இந்த பாடல்களைப் பாடுவதற்கு அழைப்பு வந்திருக்கிறது.

செல்லியல்:  மகிழ்ச்சி… மலேசியப் பாடல் ஆசிரியர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறதா?

யுவாஜி: அது உண்மையில் மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. இருப்பினும் வானொலியாகட்டும், தொலைக்காட்சியாகட்டும் நமது மலேசிய பாடல்களை ஒலிபரப்பும் போது, இசையமைத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடும் வானொலி அறிவிப்பாளர்கள் பாடலாசியரின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. பாடலாசிரியர்களின் பெயர்களை மறந்துவிடுகிறார்களா அல்லது மறக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

மலேசியாவில் எத்தனையோ பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள் குறிப்பாக மாரியப்பன் ஐயா போன்றவர்கள் இதுவரை 1000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்கள் ஆனால் அவர்களின் பெயர்கள் யாரையும் சென்று அடைவதில்லை. மக்கள் தாங்கள் விரும்பிக் கேட்கும் ஒருபாடலை எழுதியவர் யார் என்ற விவரம் தெரியாமலேயே அந்த பாடலை தினமும் கேட்டு ரசித்து வருகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

என்னைப் போன்று மலேசியாவில் மணி வில்லன்ஸ், சந்தனர், கே.வேணுகோபால், விக்கி சுப்பு, மடில்டா, லோக் அப் நாதன் என இன்னும் திறமைவாய்ந்த பல பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மக்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு மலேசியப் பாடலின் வரிகளை இணையத்தில் தேடிப் பாருங்கள். உங்களுக்கு எங்கும் கிடைக்காது. அப்படியே உங்களுக்கு கிடைத்தாலும் அதை எழுதியவர் யார் என்ற விவரம் கிடைக்காது.

அதனால், ஊடக நண்பர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் ஒரு பாடலை வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளியிடும் போது அந்த பாடலுக்கு இசையமைத்தவர், பாடியவர் மற்றும் பாடலாசிரியரின் பெயர்களை குறிப்பிடுங்கள்.

செல்லியல் : மலேசியாவில் பாடலாசிரியர்களுக்கு பாடல் எழுதுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறதா?309144_10151267482033058_1673337104_n

யுவாஜி: என்னைப் பொறுத்தவரை இதுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஒரு திறமையான பாடலாசிரியர்களுக்கு அந்த படத்தின் கதையையும், அந்த பாடலுக்கான சூழலையும், இசையையும் கொடுத்து, அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலே போதும் அந்த பாடல் மிகப் பெரிய வெற்றியடையும். ஒரு படத்தில் ராப் பாடல்களும், பாப் பாடல்களும் இருக்கலாம் தப்பில்லை அதே நேரத்தில் மக்களின் மனதில் காலத்திற்கும் நிற்பது போல் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்களையும் வைக்கவேண்டும்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், ஒரு பாடல் மக்களின் மனதில் நிற்க வேண்டுமென்றால் அதற்கான காட்சியமைப்புக்களும் தேவை. இன்னும்  ‘காதல் ரோஜாவே’ என்ற ரோஜா படப்பாடல் மக்களின் மனதில் நிற்பதற்குக் காரணம் என்ன? அந்த படம் முதலில் மக்களைச் சென்றடைந்தது, அதன்பிறகு அதில் நடித்த நடிகர்கள் மற்றும் அந்த பாடலுக்கான காட்சியமைப்புகள் மிக அருமையாக வைக்கப்பட்டிருந்தன. அதனால் தான் இன்னும் அந்த பாடல் உயிர் பெற்று வாழ்கிறது.

அதே போல், மலேசிய திரைத்துறை இன்னும் வளரவேண்டும். பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியான படங்கள் வெளிவரவேண்டும். விரைவில் வெளிவரவிருக்கும், வெண்ணிற இரவுகள், வெட்டிப்பசங்க போன்ற படங்கள் அதை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்படியாக, பாடலாசிரியர் யுவாஜியுடன் பேசிக்கொண்டிருக்கையில் நேரம் போவதே தெரியவில்லை. அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை.

ஒரு பாடலை எழுத சொல்லி மெட்டு கொடுக்கப்படுகிறது. அந்த பாடலாசிரியர் இரவு பகலாக அந்த சூழ்நிலைகளை மனதில் வைத்து, அந்த மெட்டுக்கான வரிகளை கோர்த்து, நம்பிக்கையோடு அந்த பாடலை இசையமைப்பாளரிடம் கொடுக்கிறார். அவரும் அந்த பாடல்வரிகளைப் பாடி தேவையான இடங்களில் இசையை சேர்த்தோ, குறைத்தோ ஒரு இனிமையான பாடலை உருவாக்குகிறார்.

வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் அந்தப் பாடல் ஒரு நாளில் பலமுறை வெளியிடப்படுகிறது. மக்களுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்துவிடுகிறது. எங்கும் அந்த பாடலே ஒலிக்கிறது.

இருப்பினும் அந்த பாடலை எழுதியவரின் பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்றால், அப்பாடலாசிரியருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால், பிறகு எப்படி இன்னொரு பாடலுக்கு அந்த பாடலாசிரியரால் மனம் உருகி வரிகள் எழுதமுடியும்? சிந்திக்க வேண்டும்…

– பீனிக்ஸ்தாசன்