ஆக. 3- பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் காதலை புதிய கோணத்தில் சொல்லி இயக்குனராக அறிமுகம் ஆனவர் சேரன்.
ஆட்டோகிராப் என்ற காதல் காவியத்தை இயக்கம் செய்து அதில் கதாநாயகனாக நடித்தார். அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
பின்னர் காதல் மற்றும் குடும்ப பாங்கான படங்களை இயக்கி வருகிறார். இவர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா, தாமினி ( வயது 20) ஆகிய மகள்களும் உள்ளனர். 2–வது மகளான தாமினி சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
தாமினி நேற்று காலை 11 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தன்னையும் காதலன் சந்துருவையும் பிரிக்க முயல்வதாக தந்தை சேரன் மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் எனக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. சந்துரு சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் பணியாற்றுகிறார். சினிமா விழா ஒன்றில் என் தந்தையுடன் பங்கேற்றேன். அப்போது சந்துருவுடன் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் வயப்பட்டோம். எங்கள் காதல் விவகாரம் என் தந்தை சேரனுக்கு தெரியவந்தது. ஆரம்பத்தில் அவர் எதிர்க்கவில்லை. படிப்பு முடியட்டும் அதன் பிறகு உன் விருப்பப்படி சந்துருவையே திருமணம் செய்து கொள் என்றார்.
ஆனால் கடந்த இரு மாதங்களாக எங்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என் தந்தையும் அவருக்கு நெருக்கமான சினிமா ஆட்களும் சந்துருவை மறந்து விடு என்று என்னை மிரட்டுகிறார்கள். பல தடவை சந்துருவை கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு எனக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது. அப்போது என் தந்தை வெள்ளை பேப்பரில் என் கையெழுத்தை வாங்கினார். எங்கள் காதலை பிரித்து விடுவதாகவும் சந்துருவை தீர்த்து கட்டி விடுவதாகவும் தந்தை மிரட்டுகிறார்.
என்னை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து இருந்தனர். இன்று கல்லூரிக்கு செல்வதாக பொய் சொல்லி வீட்டை விட்டு வெளியேறினேன். நேராக காதலன் வீட்டுக்கு போய் தஞ்சம் அடைந்தேன். சந்துருவின் தாய் மற்றும் அக்காள் பத்மா ஆகியோரிடம் காதலை பிரிக்க தந்தை முயற்சிப்பது பற்றி சொன்னேன். அவர்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரும் அளித்துள்ளேன். காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு தாமினி கூறினார்.
ஆட்டோகிராப் போன்ற காதல் படங்கள் எடுத்த சேரன் உங்கள் காதலை எதிர்ப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தாமினியிடம் கேட்ட போது அது படம் இது நிஜ வாழ்க்கை என்று பதில் அளித்தார்.