வாஷிங்டன், ஆக. 8- உலக நாடுகளை தொலைபேசி, இணையதளம், மின்னஞ்சல் என பல நவீன வழிகளில் அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்நோடன்.
முன்னாள் உளவுத்துறை ஊழியரான ஸ்நோடனை கைது செய்து தண்டிக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது.
ஆனால் அவருக்கு ரஷியா தற்காலிக அடைக்கலம் கொடுத்து, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவுடன் குற்றவாளிகளை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு உடன்படிக்கை இல்லை.
இருந்தபோதிலும், இது (ஸ்நோடனுக்கு ரஷியா தஞ்சம் தந்திருப்பது) எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என கூறினார்.
இருப்பினும் “ஜி -20” உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்வதாக ஒபாமா தெரிவித்தார்.
ஆனால் புதினை தனியாக சந்தித்து பேசும் திட்டத்தை அவர் ரத்து செய்து உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.