கோலாலம்பூர், செப் 24 – தேச நிந்தனை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு 6 சிறை அதிகாரிகளின் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் குவிந்த ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள், உதயகுமாரை மரியாதையாக நடத்துமாறு சிறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.
வழக்கு மேலாண்மை முடிந்தவுடன், உதயகுமாரின் அம்மா கலைவாணி மற்றும் மனைவி இந்திரா தேவி ஆகியோர் சில நிமிடங்கள் அவருடன் பேச அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அவர்களை சூழ்ந்து கொண்டு கண்காணித்தனர்.
இதனால் ஹிண்டராப் ஆதரவாளர்கள் கூச்சல் போடவே, நீதிமன்ற வளாகத்தின் அடித்தளத்தில் உள்ள தடுப்பு காவல் அறையில் வைத்து உதயகுமார் மனைவியையும், அம்மாவையும் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
இவ்வழக்கு குறித்து உதயகுமாரின் வழக்கறிஞர் தாலிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இவ்வழக்கின் மேலாண்மை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் அவர்கள் கேட்கும் இரண்டு ஆவணங்களை தயார் செய்ய முடியாது. எனவே அதற்கான ஆவணங்களை விரைவில் தருமாறு அமர்வு நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறோம். அதை வைத்து தான் மேல்முறையீடு தயார் செய்ய முடியும்” என்று கூறினார்.
மேலும், அதிகாரிகள் உதயகுமாரை நடத்தும் விதம் குறித்து தாலிவாலும் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
“எனது கட்சிக்காரர் ஒரு நீரிழிவு நோயாளி என்பதோடு முதுகுத் தண்டுவட பிரச்சனை உள்ளவர். அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறோம்” என்று தெரிவித்தார்.