அக்டோபர் 1 – கடந்த மாதம் இயக்குநர் கார்த்திக் ஷமளனை செல்லியலுக்காக நேர்காணல் செய்த போது கட்டுரையின் முடிவில் கீழ்காணும் வாக்கியங்களை தான் எழுதினேன்…
“நம்முடைய திறமைகளை நாமே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. முதலில் அதற்கான படிகளை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும். யாரும் அடிமட்டம் வரை வந்து கை கொடுப்பார்கள் என்று காத்திருந்தால் …கடைசி வரை காத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்…
விரைவில் ‘மெல்லத் திறந்தது கதவு’ ரசிகர்களின் மனதையும், மலேசிய திரைப்படங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையையும் திறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை”
இந்த வாக்கியங்கள் தற்போது உண்மையாகிவிட்டன.. கடந்த சனிக்கிழமை படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டு மலேசிய மக்களுக்கு உள்ளூர் படங்களின் மீது ஒரு மிகப் பெரிய நம்பிக்கையையும், இனி வெளிவர இருக்கும் படங்களின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
‘மெல்லத் திறந்தது கதவு’ என்ற பெயர் படத்திற்கும் சரி, இன்றைய மலேசிய கலையுலகிற்கும் சரி, மிகப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மலேசிய இயக்குநர்களிடமிருந்து ஒரு நல்ல படமாவது வந்துவிடாதா என்று ஏக்கத்தோடு காத்திருந்த ரசிகர்களின் மனதை மெல்லத் திறந்தது ..இந்த ‘மெல்லத் திறந்தது கதவு’ படம்.
படத்தின் கதை
‘மெல்லத் திறந்தது கதவு’ ஒரு ‘நவீன’ காலத்து காதல் கதை என்பதோடு, பல எதிர்பாராத திருப்பங்களையும், நிஜ வாழ்வில் நடக்கும் உண்மைகளையும் எடுத்துக்காட்டுகின்ற ஒரு படம். செயற்கைத்தனங்கள் எதுவும் இல்லை. இது போன்று கதை யார் வாழ்வில் வேண்டுமானாலும் நடக்கலாம். அதிலிருந்து எப்படி மீள்வது என்பது தான் கதையின் மையக் கருத்து.
தொடக்கத்தில் மெதுவாக கதை நகர்ந்தாலும், அடுத்த சிறிது நிமிடங்களில் உங்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்துவிடும் என்பது உண்மை.
ஆங்கிலோ இந்தியரான கதாநாயகன், தான் காதலிக்கும் பெண்ணை தனது பாதுகாப்பிலேயே வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவரது பேச்சை மீறுகிறாள் கதாநாயகி. விளையாட்டுத் தனமாக இருக்கும் அவள் ஒருமிகப் பெரிய துன்பத்தில் சிக்கிக் கொள்கிறாள்.
அவளுக்கு என்ன நேர்ந்தது? அவள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறாள்? என்பதில் தான் கதையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.
கதாப்பாத்திரங்கள்
இப்படத்தில் நடித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் ஏற்கனவே உள்ளூர் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது தலை காட்டியிருந்தாலும், அவர்களுக்கு ‘மெல்லத் திறந்தது கதவு’ தான் முகவரி தந்துள்ளது. காரணம் அந்த அளவிற்கு கதாப்பாத்திரங்கள் மிக இயல்பாக, கதைக்கு ஏற்றவாறு நடித்துள்ளனர்.
கதாநாயகன் வினேஸ் மித்ரா மற்றும் ‘யுத்த மேடை’ புகழ் ஜோய் ராசன் ஆகியோருக்கிடையே ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கிறது.
படத்தின் ஒரு காட்சியில் காதல் உணர்வோடு ஜோய் ராசன், வினேஸை பார்க்கும் போது அவரது கண்கள் அடடா… பேசுகிறது….
கதாநாயகனும் நடிப்பில் சளைத்தவரல்ல என்பது போல் கதைக்கு ஏற்றவாறு நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
இது தவிர, கதையில் இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரம் இருக்கிறது. குபேன் மகாதேவன் என்ற நடிகர் கொடூரமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மையில் அவரது ஆஜானுபாகுவான தோற்றத்திலும், நாக்கை சுழற்றிக்கொண்டு காமத்தோடு பெண்ணை நெருங்கும் காட்சிகளிலும் மிரட்டுகிறார்.
அவரது ‘நாக்கு’ அதற்குள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டது. அதற்கு தனியாக நடிப்பிற்கான விருதே கொடுத்துவிட்டார்கள் பேஸ்புக் ரசிகர்கள்…
அவ்வப்போது, படம் பார்க்கும் ரசிகர்களை கொஞ்சம் இளைப்பாற்ற கதாநாயகியின் தோழிகளாக இரண்டு பேரும் (மாமா – பூமா), உடன் பணியாற்றுபவராக ஒருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பத்திரிக்கையாளராக, மருத்துவராக, கதாநாயகனின் உதவியாளராக வரும் கதாப்பாத்திரங்கள் சரியாகப் பொருந்தியிருக்கிறார்கள்.
படத்தின் இசை
ஷமேஸ் மணிமாறன் படத்திற்கு மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அடைமழை, இதயமே, பேய்கள் மண்ணில் என மூன்று பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
மூன்றும் வெவ்வேறு உணர்வுகளைத் தரும் பாடல்களாக அமைந்துள்ளன.
பாடல்களை யுவாஜியும், ஓவியாவும் மிக அழகாக எழுதியிருக்கிறார்கள்.
சிறந்த கதை, நடிப்பு, இசை என்று மூன்றிலும் ‘மெல்லத் திறந்தது கதவு’ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குறைகள் இல்லாத படங்கள் என்று எதையும் சொல்ல முடியாது.
இருந்தாலும் இப்போது தான் நல்ல கதைகளோடும், நடிப்போடும் மலேசியத் திரைப்படங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கு நல்ல ஆதரவும், மக்களின் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளின் கடமை.
வளர்ந்து வரும் மலேசிய இயக்குநர்கள் தங்களது படங்களிலுள்ள தவறுகளை தாங்களாகவே உணர்ந்து, அதற்கேற்றவாறு அடுத்து வரும் படங்களில் திருத்திக் கொண்டால், நிச்சயம் மலேசிய படங்களின் மீது தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்பது தான் எங்களின் கருத்தும்.
கார்த்திக் ஷமளனுக்கு செல்லியலின் வாழ்த்துகள் …
– பீனிக்ஸ்தாசன்