ஜசெக வை விட மசீசவும், கெராக்கானும் ‘இனவாதம்’ நிறைந்தவையாக இருக்கின்றன – முக்ரிஸ் சாடல்

    502
    0
    SHARE
    Ad

    mukrizகோலாலம்பூர், அக் 10 –  சீன வாக்குகளைப் பெறுவதற்காக மசீசவும், கெராக்கானும் ஜசெக வை விட மோசமாக இனவாதம் பேசுகின்றன என்று கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் கூறியுள்ளார்.

    “கூட்டணிக்கட்சிகளான அவை இரண்டும் தங்களது பேச்சுக்கள் தேசிய முன்னணியை பலப்படுத்துமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜசெக மிகவும் இனவாதம் மிக்கது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் சீன வாக்குகளைப் பெறுவதற்காக மசீசவும், கெராக்கானும் ஜசெக வை விட மோசமாக இனவாதத்துடன் செயல்படுகின்றன.” என்று முக்ரிஸ் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

    அண்மையில் முக்ரிஸ் அளித்த நேர்காணல் ஒன்றில், கெடா மாநிலத்தில் உள்ள சீனப் பள்ளிகளை விட மலாய் பள்ளிகளுக்கு அதிக உதவி செய்யப்போவதாகவும், காரணம் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சீன சமுதாயம்  தேசிய முன்னணியைப் புறக்கணித்தனர் என்றும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

    #TamilSchoolmychoice

    தனது கருத்து குறித்து இன்று விளக்கமளித்த முக்ரிஸ், “ என்னிடம் சீனப்பள்ளிகளுக்கு நிறைய உதவிகள் செய்யுமாறு கேட்டார்கள் ஆனால் நான் தேசிய பள்ளிகளுக்கே இன்னும் நிறைய செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கிறது என்று கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

    வரும் அம்னோ தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருக்கும் முக்ரிஸ் மகாதீர், தனது மாநில அரசு எந்த இனத்தையும் புறக்கணிக்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

    முக்ரிஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜசெக தலைவர் தெரேசா கோக், சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் பிரச்சாரங்களை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.