கோலாலம்பூர், அக் 29 – அம்னோ தேர்தலில் பணம் விளையாடியுள்ளது என்று, தான் கேள்விப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மகாதீர் கூறியிருப்பார். உண்மையில் அப்படி ஒரு நிலை அம்னோவில் கிடையாது என்று பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காசிம் இன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஷாஹிடன் கூறுகையில், “அம்னோ தேர்தலில் பணம் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் அப்படி லஞ்சம் கொடுப்பதாக இருந்தால் குறைந்தது 75,000 உறுப்பினர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதை யாரால் செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்படி என்றால், முதிர்ந்த அரசியல் தலைவரும், நாட்டின் முன்னாள் பிரதமருமான மகாதீர் வெறும் கேள்விப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பார் என்று எண்ணுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்க, அதற்குப் பதிலளித்த ஷாஹிடன், “என்னைப் பொருத்தவரை துன் மகாதீர் ஒரு முன்னுதாரணமான மனிதர். அவருக்கு எதிரானவனாக என்னை சித்தரித்து விடாதீர்கள். அம்னோ தேர்தலில் லஞ்சம் வெறும் வதந்தி என்பது தான் எனது கருத்து.” என்று தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் தான் அம்னோ தேர்தலில் அது போன்ற பண அரசியலில் ஈடுபடவில்லை என்றும், அப்படியெல்லாம் செய்ய நினைப்பது அம்னோவில் மிகவும் கடினம் என்றும் ஷாஹிடன் திட்டவட்டமாகக் கூறினார்.
நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் வெற்றி பெறத் தகுதியே இல்லாதவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றால் அதற்கு அவர்கள் வாரி இறைத்த பணம் தான் காரணம் என்று மகாதீர் முகமட் நேற்று கருத்துத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.