கோலாலம்பூர், டிச 11 – வல்லினம் இலக்கிய இதழில் வெளிவந்த தயாஜியின் சர்ச்சைக்குரிய சிறுகதைக்கு, தேசிய முன்னணியின் கூட்டணிக்கட்சிகளுள் ஒன்றான ம.இ.கா கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ம.இ.கா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ் சந்திரன் (படம்) பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
“வல்லினம் அகப்பக்கத்தில் தனது எழுத்துக்கள் என்ற பெயரில் கிறுக்கல்களை கொட்டித் தீர்த்த தயாஜி சமுதாயத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டார். இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவரை மின்னல் எப்.எம் இடைநீக்கம் செய்திருந்தாலும் அவரது இந்த செயல் சமுதாயத்தை மற்ற இனத்தவர்களிடத்தில் தலைகுனியச் செய்துள்ளது.
எழுத்தாளர்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க முழு சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது என்பதற்காக குப்பைகளை எழுத்தாக்க நினைத்தால் அதனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? இந்து சமுயத்தை பற்றி இழிவாக கருத்துரைப்பதை நிறுத்திவிட்டு சமுதாயத்தில் இருக்கின்ற சீர்கேடுகள் களையப்படும் வண்ணம் எழுதலாம்.
மின்னல் எப்.எம் மில் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் இடத்தில் இருந்து கொண்டு, தயாஜி தரம் கெட்டவற்றை வெளிப்படுத்தியிருப்பதற்கு மஇகா இளைஞர் பகுதி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
எழுத்தாளர்களுக்கு சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தி இருக்கிறது. அவர்கள் அதனை நல்ல விதமாக சமுதாய சிந்தனையோடு செலுத்த வேண்டும். மாறாக சமுதாயத்தை இழிவுபடுத்த அல்ல. இனியாவது தயாஜி எழுத்துகள் என்ற பெயரில் குப்பைகளை எழுதி சமுதாயத்தை கேவலப்படுத்தி விடாதீர்கள்”
இவ்வாறு சிவராஜ் சந்திரன் பத்திரிக்கைகளுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.