Home நாடு கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதியில் காலிட்டை எதிர்த்து மாணிக்கவாசகம் போட்டி!

கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதியில் காலிட்டை எதிர்த்து மாணிக்கவாசகம் போட்டி!

678
0
SHARE
Ad

Manickavasagam-PKR-300-x-200ஜனவரி 21 – பிகேஆர் கட்சியில் நடப்பு சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்கும் இடையில் மூண்டிருக்கும் பூசல், சிலாங்கூர் மாநிலத்தின் பிகேஆர் தொகுதிகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு பிகேஆர் கட்சிக்குத் தேர்தல் ஆண்டு என்பதால் குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தொகுதிகளில் காலிட் இப்ராகிம் சார்பு வேட்பாளர்களுக்கும் அஸ்மின் அலி ஆதரவாளர்களுக்கும் இடையே யார் வெல்வது என்ற போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

தற்போது அனைவருடைய கவனமும் திசை திரும்பியிருக்கும் பிகேஆர் தொகுதி கோலசிலாங்கூர் தொகுதியாகும். இந்த தொகுதியின் தற்போதைய தலைவர் நடப்பு மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் ஆவார். அவரை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக காப்பார் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.மாணிக்கவாசகம் அறிவித்துள்ளார்.

மாணிக்கவாசகம் அஸ்மின் அலியின் தீவிர ஆதரவாளராக கருதப்படுகின்றார். அவர் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்திலேயே அவருக்கும் காலிட் இப்ராகிமிற்கும் அடிக்கடி முட்டல்கள், மோதல்கள் இருந்து வந்தன

இதற்கிடையில், மாணிக்கவாசகத்திற்கு மீண்டும் காப்பார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணகர்த்தா காலிட் இப்ராகிம்தான் என்றும் பிகேஆர் வட்டாரங்களில் பேசப்பட்டன.

2008 பொதுத் தேர்தலில் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மாணிக்கவாசகம், கடந்த 13வது பொதுத் தேர்தலில் கோலசிலாங்கூர் தொகுதியில் உள்ள புக்கிட் மெலாவாத்தி சட்டமன்றத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அந்த தொகுதியின் பிகேஆர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றார்.

காலிட் இப்ராகிம் சிறந்த முறையில் செயல்படவில்லை என்று கூறியுள்ள மாணிக்கவாசகம், கோலசிலாங்கூர் தொகுதியில் அவரை எதிர்த்து தான் போட்டியிடுவது உறுதி என்றும் இதனால் தனக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் மாணிக்கவாசகத்திற்கு தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காலிட்டை மாணிக்கவாசகம் வீழ்த்தி, ஒரு புதிய அரசியல் தலைவலியை காலிட்டுக்கு உருவாக்குவாரா அல்லது அன்வார் இப்ராகிம் தலையிட்டு இந்த போட்டியைத் தவிர்த்து விடுவாரா என்பதுதான் பிகேஆர் வட்டாரங்களில் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்வியாகும்.