கோலாலம்பூர், ஜன 22 – துணை கல்வியமைச்சர் கமலநாதனை உலுசிலாங்கூர் அம்னோ உறுப்பினர் தாக்கிய விவகாரத்தில், வழக்கறிஞர் மன்றம் அமைதி காப்பதால், மசீச இளைஞர் பிரிவு தானாக முன்வந்து தங்களது வழக்கறிஞர் குழுவை இவ்விவகாரத்தை கவனிக்க அமர்த்தியுள்ளது.
இது குறித்து மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் சூ வெய் சென் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் வழக்கறிஞர் மன்றம் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறது. எனவே எங்கள் கட்சியின் வழக்கறிஞர் குழுவை அமர்த்தியிருக்கின்றோம். வழக்கறிஞர் மன்றம் எங்கள் குழுவிற்கு அனுமதி வழங்கி இவ்வழக்கில் தகுந்த நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கறிஞர் மன்றம் இவ்விவகாரத்தில் கால தாமதம் ஏற்படுத்தினால், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்க நேரிடும் என்றும் சூ வெய் சென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அரசியல் ரீதியிலோ அல்லது பின்புலத்தை வைத்தோ சம்பந்தப்பட்டவரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதி கிடையாது. இது போன்ற வன்முறையை நீதித்துறை ஆதரிக்கக் கூடாது. உடனடியாக இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சூ வெய் சென் தெரிவித்துள்ளார்.