Home நாடு ம.இ.கா மத்திய செயலவை பிசுபிசுத்தது! மறு தேர்தல் இல்லை! தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன!

ம.இ.கா மத்திய செயலவை பிசுபிசுத்தது! மறு தேர்தல் இல்லை! தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன!

774
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், பிப்ரவரி 7 – நாடு முழுவதும் உள்ள ம.இ.கா உறுப்பினர்களும், இந்திய சமூகத்தினரும் ஆவலுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்த கட்சியின் மத்திய செயலவைக் கூட்டம் நேற்று மாலை எந்தவிதப் பிரச்சனையும் இன்றி முடிவடைந்தது.

#TamilSchoolmychoice

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள் விறுவிறுவென்று, வேகம் வேகமாக மத்திய செயலவைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், எதிர்பார்த்தபடி மத்திய செயலவை உறுப்பினர்கள் யாரும் தேசியத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத, மத்திய செயலவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மறு தேர்தல் இல்லை – முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டன

ம.இ.காவின் தேர்தல் குழு உறுப்பினர்களான வழக்கறிஞர் செல்வம் மூக்கையா மற்றும் டான்ஸ்ரீ குமரன் ஆகியோர் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் ம.இ.கா தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூட்டத்தில் விளக்கம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ம.இ.கா உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ சரவணன் மட்டுமே தேர்தலில் நடந்த முறைகேடுகளை முன்வைத்து ஆணித்தரமாக வாதிட்டதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் யாரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மத்திய செயலவை தேர்தல் முடிவுகளை அங்கீகரித்து விட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமும் தேர்தல் முடிவுகள் குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் அதனால், பல புதிய உறுப்பினர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்ற குழப்பத்திலேயே பேசாமல் இருந்து விட்டனர் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய செயலவை உறுப்பினர் தெரிவித்தார்.

ஆனால், கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பழனிவேல், தேர்தல் முடிவுகள் குறித்த புகார்களை ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரிக்கும் என்று கூறியதாக பெர்னாமா செய்தி தெரிவித்தது.

சங்கப் பதிவதிகாரிக்கு தேர்தல் முடிவுகள் குறித்து மேல்முறையீடு செய்வது சம்பந்தப்பட்டவர்களின் உரிமை என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.

“தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வோம்” – சரவணன்

கூட்டம் முடிவுற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தேசிய உதவித் தலைவர் சரவணன், மத்திய செயலவை தேர்தல் முடிவுகளை அங்கீகரித்து விட்டதால் இனி உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

இனி அடுத்த கட்ட முடிவு சங்கப் பதிவதிகாரி கையில்…

மத்திய செயலவையின் முடிவைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி கொண்ட வேட்பாளர்கள், இனி சங்கப் பதிவதிகாரிக்கு மேல்முறையீடு செய்யலாம்.

ஏற்கனவே, சில புகார்கள் சங்கப் பதிவதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இனி சங்கப் பதிவதிகாரி தேர்தல் முடிவுகள் குறித்த புகார்கள் குறித்து விசாரித்து ஒரு முடிவு எடுப்பார். அந்த முடிவே இறுதியானதாகும்.