சென்னை, பிப் 19 – எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின் ரஜினி நடிப்பில் இந்தாண்டு வெளியாக இருக்கும் படம் கோச்சடையான்.
ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில், பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே நடிப்பில், அனிமேஷன் படமாக முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது இப்படம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அவதார், டின் டின் படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரஜினி இரட்டை வேடத்திலும், அவருடன் சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் மிகப்பெரும் பொருட்ச்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தான் கோச்சடையான் படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸாகும் என்றும், சுமார் உலகம் முழுக்க 6 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாகிறது என்று படத்தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதேசமயம்,கோச்சடையான் படத்தின் பாடல்கள் இம்மாதம் 28ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பின் பாடல்கள் மார்ச் 9ம் தேதியும், தெலுங்கு பதிப்பின் பாடல்கள் மார்ச் 10ம் தேதியும் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான விழாவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த இரண்டு ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ரஜினி, தீபிகா படுகோனே உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.