பிப்ரவரி 20 – முகநூல் எனப்படும் ஃபேஸ் புக் நிறுவனம் பயனீட்டாளர்களிடையே பிரபலமாக இருக்கும் மற்றொரு செயலியான வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்னும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த ஒப்பந்தப்படி 18 பில்லியன் அமெரிக்க வெள்ளியை ரொக்கமாகவும், 1 பில்லியன் ரிங்கிட்டை பங்குப் பத்திரங்களாகவும் ஃபேஸ்புக், வாட்ஸ்எப்புக்காக செலுத்தும்.
இதன் மூலம் இந்த இரண்டு சேவைகளும் மேலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடங்கிய காலத்திலிருந்து வாட்ஸ் எப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. 2013இல் மட்டும் பயனீட்டாளர்கள் வாட்ஸ் எப் மூலம் 18 பில்லியன குறுந்தகவல்களை அனுப்பியிருக்கின்றனர், 36 பில்லியன் குறுந்தகவல்களை கிடைக்கப் பெற்றனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு கூடுதலான எண்ணிக்கையாகும்.
வாட்ஸ்எப் செயலியில் விளம்பரங்கள் இடம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் ஃபேஸ்புக்கும் அதே போன்ற கொள்கையைப் பின்பற்றுமா அல்லது பயனீட்டாளர்கள் தங்களுக்கிடையில் நடைபெறும் குறுந்தகவல் பரிமாற்றங்களுக்கிடையில் இனிமேல் விளம்பரங்கள் இடம் பெறுமா என்பது பற்றி இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த வணிக கூட்டணியைத் தொடர்ந்து, வாட்ஸ் எப் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜான் கவும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தில் நியமிக்கப்படுவார்.
இணைய உலகின் வணிக பரிமாற்றத்தில் மிக முக்கியமான வணிக ஒப்பந்தம் இது கருதப்படுவதால், இதன் பின் விளைவுகளை பொதுமக்களும், வணிக ஆய்வாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.