சென்னை, பிப் 25 – தமிழகம் முழுவதும் நாளை நடக்கும் ஈழ படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் முத்துக்குமார் தீக்குளித்த ஐந்தாவது நினைவு நாளான ஜனவரி 29ல் நெதர்லாந்து நாட்டிலிருந்து புறப்பட்டு ஈழ தமிழர்கள் ஜெனீவா நோக்கி செல்கின்றனர்.
முருகதாசன் தீக்குளித்து இறந்த மார்ச் 10ம் தேதி ஜெனீவாவின் மனித உரிமைகள் ஆணைய கட்டிடத்துக்கு எதிரே திரளும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களோடு அவர்கள் சங்கமித்து நீதி கேட்டு எழுப்பும் முழக்கம் விண்முட்ட எழும்.
அதற்குக் கட்டியம் கூறும் வகையில் பிப்ரவரி 26ல் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் நீதிக்கான போர் முழக்கத்தை எழுப்புவோம். சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் பிப்ரவரி 26 புதன்கிழமை காலை 11 மணிக்கு சாதி, மதம், கட்சி எல்லைகள் கடந்து நீதி கேட்கும் பட்டயங்கள் ஏந்தி ஆர்ப்பரித்து முழக்கமிட அழைக்கிறேன் என வைகோ கூறினார்.