லண்டன், மார் 3 – மனிதர்களைப் போலவே, விலங்குகள் மற்றும் பறவைகளும் இசைக்குத் தகுந்தவாறு நடனமாடும் திறன் பெற்றிருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அறிவியல் ஆய்வுக் கழகத்தின் சார்பில், சிகாகோவில் நடைபெற்ற கருத்தரங்கில், விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டு உரையாற்றினர்.
அதில், பல்வேறு புதிய தகவல்கள் வெளியாயின. விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலி உணர்வு தன்மை பற்றிய ஆய்வில், பல அதிசயங்கள் வெளியாகியுள்ளன. பறவைகள் இசையின் ஒலிக்கு தகுந்தவாறு, தங்கள் தலையை அசைத்து நடன மாடுகின்றன. சில வகை பறவைகள் இசையை உட்கிரகித்து அவற்றை மீண்டும் பாட முயற்சிக்கின்றன.
இந்த ஆய்விற்காக, 14 கிளிகளை பயன்படுத்தியபோது, அவற்றில் பல கிளிகள் இசையை நன்கு உட்கிரகித்து, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தின. வேறு சில பறவை இனங்களும் இசையை ரசிப்பது, அதற்கு தகுந்தவாறு உடல் அசைவை ஏற்படுத்தி நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டன. இதே போல், மீன்கள், கடல் சிங்கம் போன்றவை, இசைக்குத் தகுந்தவாறு தங்கள் தலையை அசைத்து நடனம் ஆடுகின்றன.
1970ம் ஆண்டு வெளியான, ஒரு இசையை ஒலிபரப்பிய போது, கடல் சிங்கம் இசைக்கு ஏற்றவாறு நடனமாடியது. இசை வடிவில் அல்லாத வேறு சில சப்தங்களையும் பறவைகள் கிரகித்துக் கொள்கின்றன. மனிதர்களைப் போலவே, விலங்குகள் மற்றும் பறவைகளும் இசையை ரசிக்கும் தன்மையும், அதற்கு ஏற்றவாறு நடனமாடும் திறனையும் பெற்றுள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.