ஜெனீவா, மார் 4 – இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான பாலின வன்முறைகள், ஆள் கடத்தல், கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடப்பதாக அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தில் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை நடத்திய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்கா தலைமையில் 4 நாடுகள் தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.
இத்தீர்மானத்தில் ராஜபக்சே அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இலங்கை சென்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவனீதம் பிள்ளையைச் சந்தித்த பொதுச்சமூக உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் துன்புறுத்தப்பட்டதை தீர்மானம் வன்மையாக கண்டித்துள்ளது.
இலங்கையில் மர்ம கொலைகள், ஆள்கடத்தல், கற்பழிப்புகள், கருத்து சுதந்திர பறிப்பு, நீதித்துறை மிரட்டப்படுவது உள்ளிட்டவற்றை ராஜபக்சே அரசு தொடர்ந்து நடத்துகிறது. நவனீதம் பிள்ளை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், உண்மைகளை கண்டறிவதற்கான அமைப்பு, தமிழருக்கான தேசிய மறுவாழ்வுக் கொள்கை உள்ளிட்டவற்றை உருவாக்க இலங்கை அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த இனப்படுகொலை, வன்முறைகளுக்கு பொறுப்பேற்பதுடன் தனிநபர்கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும், இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.