கோலாலம்பூர், மார்ச் 10 – காணாமல் போன மாஸ் விமானம் MH370 குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
முதலில் விபத்து என்ற கோண்த்தில் தொடங்கப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணையில் பயணிகளில் இருவர் போலி கடப்பிதழ் மூலம் பயணித்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டிஷ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான பினான்ஷியல் டைம்ஸ்(Financial Times) இன்று வெளியிட்டுள்ள செய்தியில் அந்த இரு பயணிகளுக்கும் பாட்டாயா தாய் ரிசோர்ட் டவுன் (Thai resort town of Pattaya) தான் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளதாக தி மலாய் மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாட்டாயாவைச் சேர்ந்த கிராண்ட் ஹாரிஜன் டிராவல் ஏஜென்ஸி ன் உரிமையாளர் பெஞ்சாபோர்ன் க்ருத்னாயிட் என்ற பெண்மணி கூறுகையில், ‘மிஸ்டர் அலி’ என்று அழைக்கப்படும் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் வந்து ஐரோப்பாவிற்கு இரண்டு குறைந்த விலை டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் படி கூறியதாகவும், பின்னர் அந்த பதிவு செய்த பயணச்சீட்டை அவர் வாங்க வரவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால், கடந்த வியாழக்கிழமை மீண்டும் தொடர்பு கொண்ட போது, மீண்டும் ஐரோப்பாவிற்கு குறைந்த விலை விமான சேவையில் இரண்டு பயணச்சீட்டுகளை பதிவு செய்து தரும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.
எனவே தான் மலேசியன் ஏர்லயன்ஸ் விமானத்தில் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த பயணச்சீட்டின் விலையை பணமாக தன்னிடம் கொடுத்ததாகவும், மிஸ்டர் அலி நிச்சயம் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்க மாட்டார் என்றும் அப்பெண்மனி கூறியுள்ளார்.
காரணம் அவர் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜெங்கிற்கு போக வேண்டும் என்று நேரடியாகக் கேட்டு முன்பதிவு செய்யவில்லை என்றும், ஐரோப்பாவிற்கு செல்ல குறைந்தவிலையில் பயணம் செய்யும் வழியை மட்டுமே பதிவு செய்து தரும்படி கூறியதாகவும் அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தற்போது தான் தகவல் வெளியிடக் காரணம், விமானம் காணாமல் போனதற்கு தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுவதால் உண்மை நிலை அறிய வேண்டும் என்று அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.