Home நாடு செயற்கைக்கோள் புதிய தகவலின் படி, “விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்” – நஜிப் அறிவிப்பு!

செயற்கைக்கோள் புதிய தகவலின் படி, “விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்” – நஜிப் அறிவிப்பு!

453
0
SHARE
Ad

Indian oceanகோலாலம்பூர், மார்ச் 15 – கடந்த ஒரு வாரமாக மலேசியா மட்டுமல்ல, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சம்பவம் மாஸ் விமானம் MH370 மாயமானது தான்.

13 நாடுகள், 57 கப்பல்கள், 48 விமானங்கள், இதுதவிர செயற்கைக்கோள்கள் உட்பட பல நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி நடத்திய தேடுதல் வேட்டையில், “விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்” என்ற முடிவிற்கு இன்று மலேசிய அரசாங்கம் வந்துள்ளது.

கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நஜிப் துன் ரசாக், இடைக்காலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

விமானம் மாயமானது தொடர்பாக நஜிப் கூறியிருப்பதாவது:-

“விமானம் மாயமான நாளில் இருந்து அனைத்துலக நாடுகளின் உதவியோடு விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். விமானத்தை கண்டு பிடிப்பது மட்டுமே இலக்காகக் கொண்டு நமது தேசிய பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் தகவல்களை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பகிர்ந்தோம்.”

“புதிய செயற்கைகோள் தகவலின் படி விமானம் கடைசியாக ரேடார் தொடர்பில் இருந்து விலகிய இடத்திலிருந்து, மலேசியாவின் கிழக்கு கடல் பகுதியின் மேல் பறந்திருக்கிறது. விமானம் கடைசியாக மார்ச் 8 சனிக்கிழமை காலை 8.11 மணியளவில் செயற்கைக் கோளுடன் தொடர்பில் இருந்திருக்கின்றது. அதன் பின்னர் விமானத்தின் தகவல் செலுத்தும் கருவி (transponder) துண்டிக்கப்பட்டுள்ளது. மலேசிய இராணுவத்தின் ரேடாரில் அடையாளம் தெரியாத ஒரு விமானம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பறந்திருப்பதும் பதிவாகியுள்ளது.இதன் அடிப்படையில் FAA, NTSB, AAIB மற்றும் மலேசிய அதிகாரிகள் தீவிர விசாரணையும், தடவியல் சோதனைகளையும் மேற்கொண்டனர்.”

“கடைசியாக ரேடார் தொடர்பில் இருந்து விலகிய இடத்தில் விமானம் திரும்பியுள்ளது உறுதியாகியுள்ளது. அதோடு செயற்கைகோளின் புதிய தகவல், நமது தேடுதல் பணிக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக தெற்கு சீன கடல் பகுதியில் நமது தேடுதல் பணியை நிறுத்திக் கொள்ளப் போகிறோம்.”

“விமானம் கடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியிடப்படும் பல்வேறு ஆரூடங்களை கருத்தில் கொண்டு மலேசிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானம் இரண்டு திசைகளில் சென்றிருக்கலாம். வடக்குப் பிரதேசத்தின் வழியாக சென்றிருந்தால் கஸகஸ்தான் வழியாக தாய்லாந்தின் வடக்கு பகுதியிலும், அல்லது இந்தோனேசியா வழியாக இந்தியப் பெருங்கடல் வழியாகவும் சென்றிருக்கலாம்”

“எனவே ஊடகங்களின் கணிப்புப் படி விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. MH370 விமானம் தனது பாதையில் இருந்து எதற்காக மாற்றப்பட்டது என்பது குறித்து அனைத்து வழிகளிலும் விசாரணை மேற்கொள்ளப்படும். பயணிகளின் உறவினர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், நமது தேடுதல் பணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது என்பது தான்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.