Home நாடு செல்லியல் பார்வை: பாலியல் வல்லுறவு குற்றங்களிலுமா இன விகிதாச்சாரம்?

செல்லியல் பார்வை: பாலியல் வல்லுறவு குற்றங்களிலுமா இன விகிதாச்சாரம்?

573
0
SHARE
Ad

Datuk-Dr-Wan-Junaidi-Tuanku-Jaafarமார்ச் 20 – மலேசியர்களை இனியும் இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது – அரசாங்க விண்ணப்ப பாரங்களில் இனம் என்ற பிரிவு இடம் பெறக் கூடாது – என்றெல்லாம் அறைகூவல்கள், நமது நாட்டில் பெருகி வருகின்ற தருணத்தில், அரசாங்கத்தில் உள்துறை துணையமைச்சராக இருக்கின்ற ஒருவர், பாலியல் வல்லுறவு குற்றங்களையும், இன அடிப்படையிலேயே குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகி நாடாளுமன்றத்திலும் தகவல்கள் தந்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குக் கீழே உள்ள பெண்கள் மானபங்கப் படுத்தப்படும்போது, (statutory rape) அதை மலாய்க்காரர்கள் மட்டும் கூடுதல் அக்கறையோடு புகார் செய்கின்றார்கள் என்றும் மற்ற இனங்கள் அவ்வாறு செய்வதில்லை என்றும் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை உள்துறை துணையமைச்சர் வான் ஜூனைடி வான் ஜஃபார் (படம்)  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நோக்கங்களுக்காக மட்டுமே இன விகிதாச்சாரம்!

இன விகிதாச்சாரம் என்பது நமது நாட்டில் அரசியல் ரீதியாக எப்போதும் இருந்து வந்துள்ளது என்றாலும், புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில்தான் இன ரீதியாக புள்ளி விவரங்களை, பொருளாதார அடிப்பையில் சேகரிக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது.

சமூகப் பிரச்சனைகள், ஏழ்மை நிலை போன்ற பிரச்சனைகளுக்காக இன ரீதியாக தகவல் சேகரிப்பதும், தருவதும் கூட, தவறில்லைதான் – அதன் மூலம் சில தீர்வுகளை நம்மால் அடையாளம் கண்டு அடைய முடியும் என்பதால்!.

ஆனால், அரசாங்கம் பாலியல் தொடர்பான குற்றங்களையும் இன ரீதியான கண்ணோட்டத்துடன் அணுகக் கூடாது.

பாலியல் கொடுமை ஒரு மலாய்ச் சகோதரிக்கு நிகழ்ந்தாலும், சீன சகோதரிக்கு நிகழ்ந்தாலும் நம் இனப் பெண்ணொருத்திக்கு நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் கொடுமையான குற்றங்கள் நமது நாட்டில் இழைக்கப்பட்டபோது, அதற்காக ஒட்டு மொத்த மலேசியர்களும் இன பாகுபாடின்றி குரல் கொடுத்திருக்கின்றனர்.

துணையமைச்சரின் கூற்று, மலாய் இனத்தைத் தவிர்த்து, மற்ற இன மக்கள் தங்கள் சமுதாயத்தின் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகளை மனதளவில் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

எந்த மடையனும், எந்தப் பெற்றோரும், எந்த சுயபுத்தியுள்ள மனிதனும் – அவர்கள் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் – கண்டிப்பாக இது போன்ற பாலியல் குற்றங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தெரிய வந்தால் கண்டிப்பாக புகார் செய்வார்கள்.

இத்தகைய குற்றங்கள் மலாய் சமூகத்தில் மட்டும் அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வியை மூடி மறைப்பதற்காக – மழுப்புவதற்காக – துணையமைச்சர் மற்ற இனங்களிலும் இது நடக்கிறது, ஆனால் அவர்கள் புகார் செய்வதில்லை என்ற ரீதியில் பதில் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் எழுகின்றது.

15 அல்லது அதற்கு குறைவான வயதுடைய இளம் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்றால் அது எல்லா மலேசியர்களையும் உள்ளடக்கிய சட்டமாகும்.

இந்த சட்டத்திலும் இன ரீதியாக பகுத்தும் – வகுத்தும் பார்ப்பது அநாகரிகம்!

அதுவும் அரசாங்கத் துணையமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பது கடுமையான கண்டனத்துக்குரியது!

 -இரா.முத்தரசன்