Home நாடு MH370: பயணியின் தந்தை வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!

MH370: பயணியின் தந்தை வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!

434
0
SHARE
Ad

SELAMAT OMARபெரா, ஏப்ரல் 2 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணித்த தன் அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்ததோ? என 239 பேரின் உறவினர்களும் கடந்த 26 நாட்களாக கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கும் வேளையில், உறவினர்களில் ஒருவர் இன்னொரு துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்.

மாஸ் விமானத்தில் பயணித்த முகமட் கைருல் அம்ரி என்பவரின் தந்தை செலாமட் ஓமாரின் (வயது 60) பெல்டா புக்கிட் மெண்டியிலுள்ள வீட்டில் இன்று காலை 4.30 மணியளவில் புகுந்த இரு கொள்ளையர்கள் ஏறக்குறைய 10,000 ரிங்கிட் மதிப்புடைய பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தன் வீட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் செலாமட் (படம்), விமானத்தை தேடும் பணியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள கோலாலம்பூரில் இருந்துள்ளார்.

#TamilSchoolmychoice

வீட்டில் அவரது மனைவி ரோசிலா அபு சமா (வயது 50) மற்றும் மகள் கையிஷா அடிபா ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வீட்டின் படுக்கையறை ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

கையில் கூர்மையான இரும்பு ஆயுதத்தை வைத்திருந்த கொள்ளையர்கள் ஓர் அறையில் உறங்கிக் கொண்டு இருந்த மகளை நோக்கி விலையுயர்ந்த பொருட்களை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர்.

பின்னர், 5000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், இரண்டு செல்பேசிகள் மற்றும் 3000 ரிங்கிட் ரொக்கப் பணம், வங்கி அட்டைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை வைத்து இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ரோசிலா தெரிவித்துள்ளார்.

மேலும், “தயவு செய்து எங்களின் பாஸ்போர்ட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். MH370 விமானத்தில் சென்றவர்களில் என் மகனும் ஒருவன். விமானத்தை தேடும் பணியில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால் அதை வைத்து தான் நாங்கள் அனைவரும் ஆஸ்திரேலியா போக முடியும் என்று அவர்களிடம் கெஞ்சினேன். நல்லவேளையாக அவர்கள் பாஸ்போர்ட்களை எடுத்துக் கொள்ளவில்லை” என்றும் ரோசியா கூறியுள்ளார்.

ரோசியா இது குறித்து மெங்குவாங் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருவதாக காவல்துறை அதை உறுதிப்படுத்தியுள்ளது.