ஏப்ரல் 5 – துருக்கி நாட்டில் நட்பு ஊடகமான ‘டிவிட்டர்’ (Twitter)க்கு, விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக, அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
துருக்கியில் தேர்தலை முன்னிட்டு ‘டிவிட்டர்’ (Twitter) போன்ற வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள், அந்நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வந்தனர். இதனால் கடந்த மார்ச் 21 ம் தேதி டிவிட்டர், யு-டியூப் போன்ற வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து ‘டிவிட்டர்’ நிறுவனம் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்நிலையில், தடை குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளமான ‘டிவிட்டர்’ மற்றும் ‘யு-டியூப்’ மீது தடை விதிக்க இயலாது என்றும், பயனர்கள் தங்களது கணக்குகளை அணுகுவதற்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு அதிகார மையம் (டி.ஐ.பி) உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக் கிணங்க, அந்நாட்டு அரசு டிவிட்டர் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் கூறுகையில், “இந்த தீர்ப்பின் மீது பெரிய மதிப்பு இல்லை என்றாலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக் கிணங்க வேண்டிய கட்டாயத்தினால் தடையை விலக்குகின்றோம்” என்று கூறியுள்ளார்.