Home நாடு MH 370 – ராடார் கண்காணிப்பில் தப்ப, விமானம் இந்தோனிசியாவை சுற்றிப் பறந்திருக்கலாம் –...

MH 370 – ராடார் கண்காணிப்பில் தப்ப, விமானம் இந்தோனிசியாவை சுற்றிப் பறந்திருக்கலாம் – புதிய தகவல்

412
0
SHARE
Ad

MH370 (2)கோலாலம்பூர், ஏப்ரல் 6 – காணாமல் போன மாஸ் விமானம் ராடார் கருவிகளின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, இந்தோனிசியாவின் ஆகாயப் பாதையைச் சுற்றிப் பறந்திருக்கலாம் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மலேசியாவின் ராடார் கண்காணிப்பில் மண்ணைத் தூவி விட்டு, செல்ல வேண்டிய திசையில் செல்லாமல், தனது பாதையில் இருந்து திரும்பிய விமானம் இந்தோனிசியாவின் ஆகாயப் பாதையில் பறந்ததாக ஒரு மலேசிய அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

விமானம் பறந்த விமானப் பாதையை ஆய்வு செய்ததில் முன்பு நினைத்ததை விட அதிகமான வேகத்தில் விமானம் பறந்தது தெரிய வந்துள்ளதாகவும் புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்கத்து நாடுகளின் ராடார் கருவிகளில் பதிவாகியுள்ள விமானப் பாதைகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிஎன்என் கூறியது.

சீனா நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து விலகி, மேற்கு நோக்கி திரும்பிய விமானம் தென் சீனக் கடல் பகுதியை நோக்கி செலுத்தப்பட்டிருக்கின்றது. இந்தோனிசியாவின் மீதோ, அந்த நாட்டின் ஆகாயப் பாதை மீதோ செலுத்தப்பட்டிருந்தால் அந்த விமானம் கண்டிப்பாக இந்தோனிசிய ராடார் கருவிகளால் அடையாளம் காணப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படிச் செய்யாமல், இந்தோனிசியாவின் ஆகாயப் பாதையைச் சுற்றி விமானம் செலுத்தப்பட்டிருக்கின்றது. இதன்மூலம், இந்தோனிசியாவின் ராடார் கருவிகளின் கண்காணிப்பிலிருந்து தப்ப வேண்டும் என்பதுதான் விமானத்தைச் செலுத்திய விமானியின் நோக்கமாக இருக்கின்றது என்பதும் தெளிவாகியுள்ளது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விமானத்தைச் செலுத்திய விமானி மிகுந்த அனுபவத்தோடும், முறையான திட்டமிடல்களோடும் விமானத்தைச் செலுத்தியிருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.