வாஷிங்டன், ஏப்ரல் 17 – சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகமான சனி, 62 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அதில் புதியதாக ஒரு துணைக்கோள் உருவாகி இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது.
இதனை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அனுப்பிய காசினி விண்கலம் அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில் மிகச்சிறிய ஒரு துணைக்கோள், சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது.
இது குறித்து குயின் மேரி பல்கலைக்கழகத்தின் வானியலாளர் கார்ல் முர்ரே கூறுகையில், “பனி படர்ந்து காணப்படும் இந்த துணைக்கோள் 1200 கி.மீட்டர் நீளமும், 10 கி.மீட்டர் அகலத்துடனும் காணப்படுகின்றது. இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்பு பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த புதிய துணைக்கோளுக்கு நாசா விஞ்ஞானிகள் ‘பெக்கி’ (Peggy) எனப் பெயரிட்டுள்ளனர். புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.