வாஷிங்டன், ஏப்ரல் 17 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடர் ஓட்டப் போட்டியின் போது தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்று பேர் பலியான இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி, மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற தொடர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பயங்கர வெடி சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் 3 பேர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டி அந்த இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், பலியானவர்களுக்காக பிராத்தனை நடத்தினர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் உயரதிகாரிகள் பலர் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் மவுன அஞ்சலி செலுத்தினர்
இந்த நினைவு அஞ்சலியின் போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் இருந்ததால், உடனடியாக அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் உள்ள பைகளில் வெடிகுண்டு உள்ளதா என சோதனை நடத்தினர். அவரிடம் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த காவல் துறையினர், அவரின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தினர்.