Home நாடு கர்ப்பால் மரணமடைந்தாலும் அன்வார் வழக்குக்கு கால அவகாச நீட்டிப்பு இல்லை

கர்ப்பால் மரணமடைந்தாலும் அன்வார் வழக்குக்கு கால அவகாச நீட்டிப்பு இல்லை

468
0
SHARE
Ad

Anwar-Ibrahim-Konvensyen-Days-Saing-Komoditi-01கோலாலம்பூர், ஏப்ரல் 23 – அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கு குறித்த மேல் முறையீடு அவரது வழக்கறிஞர் கர்ப்பால் சிங் மரணமடைந்து விட்டாலும் நாளை வியாழக்கிழமைக்குள் அந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஓரினப் புணர்ச்சி வழக்கில் அன்வாருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்துள்ளார்.

அந்த மேல் முறையீட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 24.4.2014 வியாழக்கிழமை ஆகும்.

ஆனால் இடைப்பட்டக் காலத்தில் அவரது மேல்முறையீட்டு வழக்கைக் கவனித்து வந்த கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானதால் ஆவணங்களை சமர்ப்பிக்க இரண்டு வார கால அவகாசம் கேட்டு அன்வாரின் வழக்கறிஞர் சலேஹா அல் ஹயட் உச்சநீதிமன்ற பதிவதிகாரிக்கு மனு சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும் அவரது கால அவகாச நீட்டிப்பு மனுவுக்கு பதிவு அதிகாரி அனுமதி வழங்கவில்லை.

மாறாக அத்தகைய மனு, முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று பதிவதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே போல் இந்த வழக்கில் கர்ப்பாலுக்கு உதவியாகப் பணியாற்றிய கர்ப்பாலின் மகன் ராம் கர்ப்பாலும், கர்ப்பாலுடன் கார் விபத்தில் சிக்கி சிறிய அளவில் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கை இனி கர்ப்பாலுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் சுலைமான் அப்துல்லா தலைமையேற்று நடத்துவார் என்றும் சுலைஹா உறுதிபடுத்தினார்.