சியோல், ஏப்ரல் 28 – தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் வடகொரியா, அவ்வபோது அணு ஆயுத மற்றும் அதிநவீன ஏவுகணை சோதனைகளை அதன் எல்லையில் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அந்நாடு, மீண்டும் ஒரு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தென்கொரிய ராணுவ அதிகாரி கூறுகையில், “ஏற்கனவே அணு ஆயுத சோதனை நடத்திய பங்க்யே அன்ரி பகுதியில் மீண்டும் ஒரு சோதனைக்கு வடகொரிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். தலைமை உத்தரவிட்டபடி, எந்த நேரத்திலும் இந்த சோதனை நடத்தப்படக் கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கு கவலை அளித்துள்ளது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, “வடகொரியா, அணு ஆயுத சோதனை மேற்கொண்டால், அந்நாடு சர்வதேச விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.