கோலாலம்பூர், மே 8 – பிரிட்டிஷ்காரர்களால் ‘தானா மெலாயுவுக்கு’ கொண்டு வரப்பட்ட சீனக் குடியேறிகள் சட்ட விரோதிகள் என்று பேசிய இஸ்லாமிய குழுவான இக்காதான் முஸ்லிம் மலேசியா எனும் அமைப்பு மீது மசீசவும் ஜசெகவும் அதனை தேச நிந்தனை பேச்சு என்று கூறி காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
இஸ்மா இன வெறுப்பை ஊக்குவிப்பதாகவும் மலாய்க்காரர் அல்லாதவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும் இதை தடுக்காவிட்டால் நாட்டில் இன வேற்றுமையை அது வளர்க்கும் என்று வலியுறுத்தி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் யங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை விசாரணை – டான்ஸ்ரீ காலிட் அபுபக்கார்
இதற்கிடையில் இன வெறுப்பை தூண்டும் விதத்தில் பேசிய இஸ்மா தலைவர் அப்துல்லா ஜாயிக் மீது 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கார் உறுதிப்படுத்தினார்.
தேச நிந்தனை அறிக்கைகளை வெளியிட்டதாக இஸ்மா எனும் முஸ்லிம் அமைப்பின் தலைவர் அப்துல்லா ஜாயிக் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக இன நெருக்கடிகளை தூண்டுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறைத் தலைவர் மேலும் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்மா அகப்பக்கத்தில் சீனர்கள் மலாயாவிற்கு அத்துமீறி நுழைந்தவர்கள் என்றும் அவர்களுக்கு எப்படி, யார் குடியுரிமை வழங்கியது என்றும் அவர் அந்த அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதை எதிர்த்து மசீச, ஜசெக கட்சியினரும் மற்றும் சீன சமூகத்தினரும் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனத் தொடர்ந்து அவர்கள் காவல் துறையிலும் புகார்கள் அளித்துள்ளனர்.