கெய்ரோ, மே 30 – எகிப்தில் முகமது மோர்சியின் ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தியினால், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவத் தளபதியான அப்டெல் படா அல் சிசி, மோர்சியை கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கி காவலில் வைத்தார்.
அவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரும் ஒடுக்கப்பட்டு வந்தனர். அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளும், கலவரங்களும் நாட்டையே நிலை குலைய வைத்தது.
இதனிடையில் கடந்த 25-ம் தேதி அங்கு அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. தனது இராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் வேட்பாளராக சிசி போட்டியிட்டார்.
பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நேற்று வெளிவந்துள்ள முடிவுகளில், சிசி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற 50 சதவிகித இடங்களில் 92.2 சதவிகித வாக்குகளை சிசி பெற்றிருந்தார். அவரது ஒரே போட்டியாளரான ஹம்தீன் சபஹி 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார்.
சிசியின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் கெய்ரோவில் வாணவேடிக்கை கொண்டாட்டங்களும் தொடங்கின. அவரது ஆதரவாளர்கள் எகிப்து நாட்டின் கொடியினை அசைத்தும், தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சிசியின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால் அரசியல் ஆய்வாளர்களோ அல் சிசி சர்வாதிகாரியாக மாறக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.