கோலாலம்பூர், மே 30 – மலேசியாவில் தங்கியிருந்த 3 விடுதலைப்புலிகளை சமீபத்தில் மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அவர்களை இலங்கை கடுமையாக சித்ரவதை செய்யலாம் என்று உலகத் தமிழர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
மலேசியாவின் இந்த செயலுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும், ஐ.நா. சபை அகதிகள் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
3 பேரையும் இலங்கை கடும் சித்ரவதைக்குள்ளாக்கும் என்று தெரிந்தும் மலேசியா அவர்களை இலங்கைக்கு அனுப்பி இருப்பது தவறான செயல் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன. இது தொடர்பாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் நிர்வாகி யந்தி இஸ்மாயில் கூறியதாவது,
“கைதான 3 பேரில் 2 பேருக்கு ஏற்கனவே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஒருவர் அரசிடம் “தஞ்சம் கேட்டிருந்தார். ஆனால் அப்படிப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பியது தவறான செயல். இது ஐ.நா. சபையினுடைய விதிமுறைக்கும் எதிரானது.”
“இலங்கையில் அவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் நிலையிலும் அவர்களை அனுப்பி இருப்பது தவறான நடைமுறை” என்று கூறியுள்ளார்.