இஸ்லாமாபாத், ஜூன் 7 – மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு, நவாஸ் ஷெரீஃப் இந்தியா வந்த போது அவர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டார் என்றும், அதன் காரணமாக அவர் இந்தியாவின் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளார் என்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் நவாஸ் ஷெரீஃப் கலந்து கொண்டபோது, அவருக்கு சரியான மதிப்பு கொடுக்கவில்லை.
அதனால் அவர் மிகுந்த அதிருப்தியில் உள்ளார்” என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தகவலை பாகிஸ்தானின் ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சியில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த தலைவரே தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் ஒளிபரப்பியுள்ளது.
இந்த பயணத்தால் இரு நாட்டு உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று முஸ்லீம் லீக் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு தலைவர் கூறியதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், இந்தியாவிற்கு வருகை புரிந்த ஷெரீஃப், ஒரு பள்ளிக்கூட சிறுவன் போன்று நடத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.