புதுடெல்லி, ஜூன் 11 – இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் இரு தலைவர்களும் தனியாக சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து பேசினார்கள். அப்போது மோடி, நவாசின் தாயாருக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
அதை நவாசும் அவரது தாயாரிடம் வழங்கிய செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியானது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, நவாஸ் ஷெரிப் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இரு தரப்பு வட்டார உறவுகள் குறித்து இருவராலும் விவாதிக்கப்பட்ட கருத்துக்களால் மிகவும் திருப்தியடைந்து, தான் தாய்நாடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் பாகிஸ்தான் தூதரகம் மூலமாக இந்திய பிரதமர் மோடியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நவாஸ் ஷெரிஃப், இந்தியாவிற்கு அவர் வந்த போது அவமதிக்கப்பட்டார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.