ரியோ டி ஜெனிரோ, ஜூன் 16 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 6 மணியளவில் பிரேசிலின் புகழ்பெற்ற கடற்கரை நகரான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளின் எஃப் பிரிவு ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் போஸ்னியா ஹெர்சகோவினாவும் மோதின.
இதில் அர்ஜெண்டினா 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அர்ஜெண்டினாவின் முதல் கோலை போஸ்னியாவின் ஆட்டக்காரர் தவறுதலாக அவராகவே போஸ்னியாவின் கோல் கம்பத்திற்குள் செலுத்தி நிலைமையை அர்ஜெண்டினாவிற்கு சாதகமாக்கினார்.
உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் களமிறங்கும் அர்ஜெண்டினா இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
குழுமியிருந்த இரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் 2வது கோலை அடித்து மெஸ்ஸி, அர்ஜெண்டினா இரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக போஸ்னியா ஆட்டக்காரர் ஒரு கோலை அடித்து 2-1 என்ற கோல் எண்ணிக்கை நிலைமையை உருவாக்கினார்.
அர்ஜெண்டினா – போஸ்னியா விளையாட்டின் போது எடுக்கப்பட்ட படக் காட்சிகள்:-
முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் திளைக்கும் அர்ஜெண்டினா விளையாட்டாளர்கள்…
அர்ஜெண்டினா தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) மெஸ்ஸியின் விறுவிறுப்பான ஆட்டம்….
அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலை அடித்து தனது நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்த மெஸ்ஸி…
படங்கள்: EPA