Home நாடு கைப்பற்றப்பட்ட பைபிள்களை திரும்பக் கொடுங்கள் – சபா, சரவாக் தலைவர்கள் கோரிக்கை

கைப்பற்றப்பட்ட பைபிள்களை திரும்பக் கொடுங்கள் – சபா, சரவாக் தலைவர்கள் கோரிக்கை

631
0
SHARE
Ad

jais-selangorபெட்டாலிங் ஜெயா, ஜூன் 16 – அண்மையில் சிலாங்கூர் இஸ்லாமிய சமயப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பைபிள்களை உரியவர்களிடம் திரும்பக் கொடுத்து விடுமாறு சபா, சரவா மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

சரவாக் நில மேம்பாட்டு அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் மாசின், “இந்த சமய இலாகாக்களின் நடவடிக்கையானது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

“இந்த இஸ்லாமிய இலாகாக்கள் சட்டத்தை விட தாங்கள் மேற்பட்டவர்கள் என்பதை காட்டிக் கொண்டுள்ளனர். எனக்குத் தெரிந்த சட்டம் வரையில் இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“நமது நாடு இதனால் வரை நிலைத் தன்மையுடனும் அமைதியுடனும் இருந்து வருவதற்கு காரணம் அனைவரும் நாட்டில் சட்ட திட்டங்கள் பின்பற்றி வந்ததே ஆகும். ஏதாவது ஒரு இயக்கமோ அரசாங்க அமைப்போ நாட்டின் சட்டத்தைவிட தாங்கள் பெரியவர்கள் என காட்டிக் கொள்ள முற்பட்டால் அல்லது எந்தவொரு அமைப்பும் சட்டத்தை அமலாக்கம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டால் அதன்பிறகு கடவுள்தான் இந்த நாட்டைக் காப்பற்ற வேண்டும்” என்றும் ஜேம்ஸ் மார்சன் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ ஜோசப் குருப், கடந்த ஜனவரியில் கைப்பற்றப்பட்ட பைபிள்களை சம்பந்தப்பட்ட இஸ்லாமிய இலாகாக்கள் மத நல்லிணக்கம் கருதியும் நட்புணர்வு கருதியும் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பிக் கொடுக்கும் பைபிள்கள் நல்ல நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமைத் துறை இலாகாவின் பொறுப்பு அமைச்சராகவும் ஜோசப் குருப் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரியில் கைப்பற்றப்பட்ட பைபிள்களை தாங்கள் திருப்பித் தர முடியாது என்றும் அவை விசாரணையில் இருப்பதாலும் அவை சம்பந்தப்பட்ட பிரச்சினையின் ஆதாரம் என்பதாலும் அவற்றை திருப்பி தர முடியாது என்றும் சிலாங்கூர் இஸ்லாமிய பிரிவு தலைவர் டத்தோ முஹமட் அட்சிப் முஹமட் இசா அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.