பெய்ஜிங், ஜூன் 16 – எம்எச் 370 விமானம் காணாமல் போய் 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தங்களின் சொந்தங்களை இழந்த சோகத்தை நட்பு ஊடகங்களின் வழியாகவே பறிமாறிக்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சீனா நாட்டு பயணிகளின் உறவினர்கள் சீன நட்பு ஊடகங்களான வி சாட், வைபோ தளங்களின் வழி தங்களின் உணர்வுகளையும் சோகங்களையும் பறிமாறிக் கொண்டுள்ளனர். வைபோ என்பது டுவிட்டர் இணையத் தளத்திற்கு இணையான சீன இணையத் தளமாகும்.
இந்த நட்பு ஊடகங்களின் வழி வெளியிட்ட செய்திகளில் பயணிகள் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் திரும்பி வரும் வரை இந்த போராட்டத்தை தொடரப் போகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சில குடும்பத்தினர் சீன ஆலயங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனை நடத்தினர். தங்களது மற்ற குடும்ப உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் குறிப்பாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நாங்கள் துயரத்தில் தவித்து வருகிறோம் என்று சில பயணிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தனது 57 வயது தாயாரை இழந்த ஸ்டீப் வாங் என்பவர் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மணி நேரம் இணையத் தளங்களின் வழி எம்எச் 370 குறித்த தகவல்களை தான் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தங்களுக்கு முறையான பதில்கள் வழங்கப்படவில்லை என்றும் பயணிகளின் உறவினர்கள் பலர் குறை கூறினர்.
பெய்ஜிங் நகரில் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கான மையம் ஒன்று ஏற்படுத்தி இருந்திருந்தாலும் அதனால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறினார்.இதன் காரணமாக நாட்டின் வெவ்வேறு பகுதிககளில் இருக்கும் உறவினர்கள் நட்பு ஊடகங்களின் வழியே தான் தங்களது சோகங்களை பறிமாறிக் கொள்ள முடிகிறது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் முன் பண காப்புறுதி தொகையாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை இதுவரை 127 பயணிகளின் உறவினர்கள் ஏற்க மறுத்ததாகவும் இந்தப் பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.