பீகார், ஜூன் 21 – பீகார் மாநிலத்தில் திடீர் மூளை நோய் பாதிப்புக்கு 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நிலைமையை நேரில் கண்காணிப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், வெள்ளிக்கிழமை இரவு முசாஃபர்பூருக்கு விரைந்தார்.
இதுகுறித்து முசாஃபர்பூர் மருத்துவமனை மருத்துவர் கியான் பூஷண் கூறுகையில், “கிழக்கு சம்பாரண், சிவ்ஹர், சீதாமரி, வைசாலி, சமஸ்திபூர் ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில், மூளை நோயில் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் தற்போது 670 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. முசாஃபர்பூரில் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
ஏனெனில், இங்கு பல மாதங்களாக மழை பெய்யவில்லை. முந்தைய காலங்களில், மூளை நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டபோது, பருவமழை தொடங்கியதும், நோய் பரவுவது விரைவாகக் குறைந்தது’ என்றார் மருத்துவர் கியான் பூஷண்.