கோலாலம்பூர், ஜூலை 2 – மஇகா சார்பில் காலியாக இருந்த 3 செனட்டர் பதவிகள் கடந்த ஓரிரண்டு வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன. அவற்றில் இரண்டு செனட்டர் பதவிகள் மட்டுமே தற்போது நிரப்பப்பட்டுள்ளன.
முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் விக்னேஸ்வரன், பகாங் மாநில மஇகா தலைவர் இரா.குணசேகரன் ஆகிய இருவரும் மஇகா சார்பில் புதிய செனட்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், காலியாக இருந்த 3ஆவது செனட்டர் பதவி என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பிலிருந்தும் மஇகா தலைமையகம் சார்பிலும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
இதனால், மஇகாவின் அரசியல் உரிமையாகத் திகழ்ந்து வந்த மற்றொரு செனட்டர் பதவியும் பறிபோய்விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன் வெளிவந்த தகவல்களின்படி ம.இ.கா சார்பில் 3 செனட்டர் பதவிகள் காலியாகியிருந்தன.
அந்த மூன்று செனட்டர்கள் யார்?
பினாங்கு மாநில முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சுப்பையா வகித்த செனட்டர் பதவி -தாப்பா தொகுதித் தலைவர் டத்தோ டாக்டர் மாலசிங்கம் வகித்த செனட்டர் பதவி -தேசியத் தலைவர் பழனிவேல் வகித்த செனட்டர் பதவி – ஆகிய மூன்று செனட்டர் பதவிகளே இதுவரை காலியாக இருந்த பதவிகள்.
இதில் எந்த இரண்டு செனட்டர் பதவிகள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன எந்த செனட்டர் பதவி இதுவரை நிரப்பப்படவில்லை என்ற கேள்விக்கு இதுவரை மஇகா சார்பில் யாரிடமும் பதிலில்லை.
மஇகாவும் இந்திய சமுதாயமும் கால ஓட்டத்தில் இழந்து விட்ட எத்தனையோ அரசியல் உரிமைகள் போன்று, இந்த மூன்றாவது செனட்டர் பதவியும் பறிபோய்விட்டதா என்ற சந்தேகமும் ம.இ.கா வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ளது.
நான்காவது செனட்டர் பதவி கிடைக்குமா?
இந்த மூன்று செனட்டர் பதவிகள் தவிர நான்காவதாக செனட்டர் பதவி ஒன்று பேரா மாநிலம் சார்பாக வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருந்தார்.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பேரா மாநிலத்தில் மஇகாவுக்கு இருந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றை மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது.
நீண்ட காலமாக போராடி மஇகா பெற்ற நான்காவது சட்டமன்ற உறுப்பினர் பதவியை எந்தக் காரணத்திற்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற அறைகூவல்கள் அந்த சமயத்தில் இந்திய சமுதாயத்திலிருந்து நாடு முழுவதும் எழுந்தன.
அதற்கு பதிலளிக்கும் வகையில், மஇகா விட்டுக் கொடுக்கும் சட்டமன்றத்திற்கு பதிலாக மஇகாவுக்கு கூடுதலாக ஒரு செனட்டர் பதவி வழங்கப்படும் என்று தேசிய முன்னணி உறுதியளித்திருப்பதாக பழனிவேல் அறிவித்தார்.
ஆனால், ஒராண்டு ஆகியும் இன்னும் அந்த சட்டமன்றத்திற்கு மாற்றான செனட்டர் பதவி பற்றிய எந்தவொரு அறிகுறியும் அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த செனட்டர் பதவிதான் பேரா மாநில தலைவர் டத்தோ ஆர்.கணேசனுக்கு வழங்கப்படும் என்ற ஆருடங்கள் நிலவி வந்தன.
ஆனால், நாம் இழந்து விட்ட சட்டமன்றத்திற்கு பதிலாக புதிய செனட்டர் பதவி இதுவரை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க மஇகா வகித்து வந்து மூன்றாவது செனட்டர் பதவியையும் அந்தக்கட்சி இன்று இழந்து நிற்கின்றது.
மாயமாக மறைந்து போன மூன்றாவது செனட்டர் பதவி குறித்து மஇகா விரைந்து பதில் கூறுமா?