புதுடில்லி, ஜூலை 3 – சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிட விபத்து குறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கட்டிட விதிமீறல்கள் குறித்து 2 வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை புறநகரான மவுலிவாக்கத்தில் கடந்த 28-ஆம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். கட்டிட மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே 11 மாடி கட்டிட விபத்து தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமை ஆணையம், நேற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சென்னை புறநகர் பகுதியான மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் கடந்த 28-ஆம் தேதி இடிந்து விழுந்ததில் 47பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடைய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதில் கட்டுமான தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்திருக்கிறது என்றும்,
சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம், விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊடகங்களில் வெளிவந்த இந்த செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது அந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மனிதர்களின் உரிமைகளுக்கு எதிரான மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலான செயலாக எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த விபத்து குறித்து 2 வார காலத்தில் விரிவான அறிக்கை ஒன்றை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.