சென்னை, ஜூலை 17 – இலங்கை மீதான ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இரக்கம் காட்டுவதற்கு தகுதியான நாடல்ல இலங்கை என்பது உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகும். லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சே அரசுக்கு தவறுகளைத் திருத்திக் கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் திருந்தவில்லை.
அதனால்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் இதனை ஆதரித்துள்ள நிலையில், இந்தியா எதிர்ப்புத் தெரிவிப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதே இல்லை. இலங்கையுடனான வர்த்தக, ராணுவ உறவை பாஜக அரசும் தொடர்கிறது.
உலகின் மிகக் கொடிய இனப்படுகொலையை நடத்திய ராஜபட்சே தண்டிக்கப்பட வேண்டுமானால் ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுப்பது அவசியம்.
இலங்கை மீதான ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் ராமதாஸ்.