சென்னை, ஜூலை 18 – லிங்கா பட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் திடீரென மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயகத்தில் லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிட்ப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 2 தினங்களுக்கு முன் நடந்தது. எதிரிகளுடன் ரஜினி சண்டை போடுவது போல் காட்சி. இதில் டூப் பயன்படுத்தலாம் என ரவிக்குமார் கூறினார்.
காரணம், மிகவும் கடினமான காட்சிகளில் சிரத்தை எடுத்து ரஜினி நடிக்க கூடாது என ஏற்கனவே மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். இதனால்தான் ரவிக்குமார் அப்படி கூறினார்.
வில்லன் நடிகர்களை காலால் எட்டி உதைப்பது, கொஞ்சம் வேகமாக திரும்பி தாக்குவது போன்ற காட்சியில் நடிக்கவேண்டும். இதற்கு ரஜினி, நான் மக்களுக்காக நடிக்கிறேன் நானே செய்துகொள்கிறேன் என்று ரஜினி சொன்னாராம்.
இதனால் காட்சியை படமெடுக்க ஆரம்பித்தனர். சண்டை காட்சியில் நடித்துக் கொண்டே இருந்தபோது ரஜினி திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து படக்குழு அதிர்ச்சியடைந்தது.
உடனே அவருக்கு தண்ணீர் தரப்பட்டது. சிறிது நேரத்தில் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சோர்வு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாகவும், சிறிது காலம் ஓய்வு எடுத்தால் நல்லது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு ராணா படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, வாந்தி எடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டார் ரஜினி. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.
இதையடுத்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து திரும்பினார். அப்போதே கடுமையான சண்டைக் காட்சிகளில் நடிக்க கூடாது என மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் ரஜினி மயங்கி விழுந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மீண்டும் லிங்கா படத்தில் நடிப்பாரா? என தற்போது சினிமாவட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.